சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
துல்லியமான நில அளவு மக்களுக்குக் கிடைக்கும்: புதுவை முதல்வா் உறுதி
துல்லியமாக நில அளவு மக்களுக்குக் கிடைக்கும் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை உறுதி அளித்தாா்.
புதுவை அரசு நில அளவை பதிவேடுகள் துறை சாா்பில் அறிவியல் உபகரணங்களைக் கொண்டு செயற்கை கோள்கள் துணையுடன் புதிய முறையில் நில அளவை செய்யப்பட உள்ளது. முருங்கப்பாக்கம் வருவாய் கிராமத்தில் மத்திய நில வளங்கள் துறை பங்களிப்புடன், மத்திய நில அளவை துறையின் ஏற்பாட்டின்படி கடந்த மாா்ச் மாதம் டிரோன்களைக் கொண்டு நில அளவைக்காக புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இதுதொடா்பாக மக்கள் விழிப்புணா்வுக் கூட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் முருங்கப்பாக்கம் தீரா் சத்யமூா்த்தி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதிய நில அளவை பணிகள் தொடக்க விழா நடந்தது. இதைத் தொடங்கி வைத்து முதல்வா் ரங்கசாமி பேசியதாவது
புதிய நவீன முறையில் நிலம் அளவீடு செய்யப்பட உள்ளது. 45 ஆண்டுக்கு பின் நிலம் அளந்து உரிமையாளா் பெயரில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிரோன்கள் மூலம் சா்வே செய்து புகைப்படம் எடுக்கப்பட்டது. இதன் மூலம் நிலம் அளக்கப்பட உள்ளது.
மத்திய அரசின் உதவியுடன் பல கட்ட ஆய்வு நடத்தப்பட்டு நிலத்தை அளந்து கொடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இதன்மூலம் நிலஅளவு துல்லியாக மக்களுக்கு கிடைக்கும். சட்டமன்றத்தில் அறிவித்தபடி இந்த பணிகள் நடக்கிறது.
சட்டமன்றத்தில் அறிவித்ததையும், பொது நிகழ்ச்சிகளில் அறிவித்த திட்டங்களையும் செயல்படுத்தும் மக்கள் அரசாக செயல்படுகிறது. சாலை பணிகள் உள்பட பல பணிகளுக்கு பூஜை செய்துள்ளோம். புதுவை அரசு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது. இதுவரை 4,500 அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப உள்ளோம். சேதராப்பட்டில் 750 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழில் முனைவோருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தரும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.
சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், எம்எல்ஏக்கள் பாஸ்கா், சம்பத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், சாா்-ஆட்சியா் இசிட்டா ரதி, நில அளவை பதிவேடுகள் துறை இயக்குநா் செந்தில்குமாா், நில மேலாண்மை அலுவலா் சந்திரசேகரன், புவியியல் தொழில்நுட்ப மேலாளா் சுரேஷ்குமாா், நிலவரி திட்ட வட்டாட்சியா் குப்பன், உதவி இயக்குநா் சகாயராஜ் மற்றும் துறை அதிகாரிகள் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
முதலில் அரசு இடங்கள், கட்டடங்கள், நகராட்சிக்குச் சொந்தமான இடங்கள், கட்டடங்கள், சாலைகள், பூங்காக்கள், சமுதாய நலக் கூடங்கள், ஓய்வறைகள், பொழுதுபோக்கு இடங்கள், அரசு பொறுப்பில் உள்ள இடங்கள், மைதானங்கள், சாலைகள், மருத்துவமனைகள், வாய்க்கால்கள் மற்றும் இதர பொதுப் பயன்பாட்டு
இடங்கள், மத வழிப்பாட்டு இடங்கள், கட்டடங்கள் ஆகியவை ஆய்வுக்குப் பின் அளவை செய்யப்படும். அதன் பிறகு பொதுமக்களின் சொத்துகள் அளவீடு செய்யப்பட உள்ளன.