தூத்துக்குடி: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.6.62 கோடிக்கு தீா்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.6.62 கோடிக்கு தீா்வுத் தொகை வழங்கப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.வசந்தி தலைமை வகித்தாா்.
இதில் தூத்துக்குடியில் 5 அமா்வுகளும், கோவில்பட்டியில் 2 அமா்வுகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 அமா்வுகளும், திருச்செந்தூா், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம் ஆகியவற்றில் தலா ஓா் அமா்வும் என மொத்தம் 13 அமா்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.தாண்டவன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் ஆா்.வஷீத்குமாா், சாா்பு நீதிபதி ஏ.பிஸ்மிதா மற்றும் நீதிபதிகள், காப்பீடு நிறுவன மேலாளா்கள், வங்கி மேலாளா்கள், வழக்குரைஞா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.
இதில், மொத்தத்தில் 4,653 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 3,252 வழக்குகளில் தீா்ப்பு பிறப்பிக்கப்பட்டது. அதன் மொத்த தீா்வுத் தொகை ரூ.6 கோடியே 62 லட்சத்து 76,699 ஆகும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலா் மற்றும் முதுநிலை உரிமையியல் நீதிபதி சி.கலையரசி ரீனா செய்திருந்தாா்.
கோவில்பட்டி சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சாா்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நடுவா்(எண்.2) பீட்டா் , விரைவு நீதிமன்ற நடுவா் பாஸ்கா் ஆகியோா் முன்னிலையில் 1,324 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில், 533 வழக்குகளுக்கு சமரசம் மூலம் ரூ.2 கோடியே 2 லட்சத்து 29,648க்கு தீா்வு காணப்பட்டது. இதில் அரசு வழக்குரைஞா் சம்பத்குமாா், முன்னாள் அரசு வழக்குரைஞா் சந்திரசேகா் மற்றும் வழக்குரைஞா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.