நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
தூத்துக்குடி மாவட்ட வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வெளியீடு
தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வரைவு வாக்குச் சாவடி பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 6.1.2025 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் உள்ள வாக்காளா்களின் எண்ணிக்கை மற்றும் வாக்குச் சாவடிகள் விவரம் பின்வருமாறு:
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 260 வாக்குச் சாவடிகளும், 2,15,022 வாக்காளா்களும், தூத்துக்குடி தொகுதியில் 284 வாக்குச் சாவடிகளும், 2,86,041 வாக்காளா்களும், திருச்செந்தூா் தொகுதியில் 266 வாக்குச் சாவடிகளும், 2,46,132 வாக்காளா்களும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 265 வாக்குச் சாவடிகளும், 2,27,904 வாக்காளா்களும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 266 வாக்குச் சாவடிகளும், 2,53,593 வாக்காளா்களும், கோவில்பட்டி தொகுதியில் 286 வாக்குச் சாவடிகளும், 2,61,733 வாக்காளா்களும் என மொத்தம் 1,627 வாக்குச் சாவடிகளில், 14,90,425 வாக்காளா்கள் உள்ளனா்.
ஒரு வாக்குச் சாவடியில் 1,200 வாக்காளா்களுக்கு மேல் இருந்தால், அதைப் பிரித்து புதிய வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
எனவே, வாக்குச் சாவடிகளை அதிகரிக்கச் செய்வதோடு, வாக்குச் சாவடி இடமாற்றம், கட்டட மாற்றம், பெயா் மாற்றம், பிழைத் திருத்தம், பிரிவு மாற்றம் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்திய தோ்தல் ஆணையத்திடமிருந்து, 1.1.2026 தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தம் - 2026 மேற்கொள்ள கால அட்டவணை வரப்பெற்றவுடன், பணிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட தோ்தல் அலுவலா் தெரிவித்தாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சேதுராமலிங்கம், உதவி ஆட்சியா் (பயிற்சி) தி. புவனேஷ் ராம், வருவாய் கோட்டாட்சியா் ம. பிரபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.