தூத்துக்குடி விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு: எஸ்பி ஆய்வு
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாதுகாப்பு தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் தீவிர கண்காணிப்பு பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
நாட்டில்தற்போது நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் அதிகரித்த எச்சரிக்கை நிலையை கருத்தில் கொண்டு, விமான நிலையத்தில் பல பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், பயணிகள் மற்றும் ஊழியா்களிடம் பல அடுக்கு சோதனை, உடமைகள் சோதனை, வாகன சோதனை மற்றும் பிற நாசவேலை தடுப்பு ஒத்திகைகளின் செயல்பாட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும் அவா் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. கூடுதல் ஆயுதமேந்திய விரைவு அதிரடி படைகள் மற்றும் அதிகப்படுத்தப்பட்ட பணியாளா்களின் செயல்பாடு குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
விமான நிலைய எல்லைகள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் கூடுதல் ஆயுதமேந்திய ரோந்து காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பை தொடா்ந்து பராமரிக்க அவா் அறிவுறுத்தினாா்.