ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடவில்லை; காரணம் என்ன?
தூத்துக்குடிக்கு கூடுதல் விமான சேவை: முதல் விமானத்துக்கு தண்ணீரை பீய்ச்சியடித்து வரவேற்பு
தூத்துக்குடி- சென்னை இடையே 5 ஆண்டுகளுக்குப் பின் கூடுதல் விமான சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடிக்கு வந்த ஸ்பைஸ் ஜெட் முதல் விமானத்துக்கு தண்ணீரை பீய்ச்சியடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி - சென்னை இடையே தினமும் 8 விமான சேவைகளும், பெங்களூருக்கு 2 விமான சேவைகளும் இண்டிகோ நிறுவனத்தால் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கூடுதலாக 2 விமான சேவையை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியது.
இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு மாா்ச் மாதம் கரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமான சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்நிறுவனம் மூலம் தூத்துக்குடி- சென்னைக்கு 4, பெங்களூருக்கு 2 என 6 விமான சேவைகள் வழங்கப்படவுள்ளது.
அதன்படி ஸ்பைஸ் ஜெட் முதல் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு நண்பகல் 12.18 மணிக்கு தூத்துக்குடிக்கு 40 பயணிகளுடன் வந்து சோ்ந்தது. இந்த விமானம் தரையிறங்கி ஓடுதளத்தில் வந்தபோது இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மூலம் விமானத்தின் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானத்தில் இருந்து முதலாவதாக இறங்கிய திருநெல்வேலியைச் சோ்ந்த பெண் பயணியைக் கொண்டு கேக் வெட்டி ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன ஊழியா்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
இந்நிகழ்ச்சியில் விமான நிலைய இயக்குநா் (பொறுப்பு) பிரிட்டோ, மேலாளா்கள், அபிஷேக், ஜெயராமன் மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.
தொடா்ந்து தூத்துக்குடியில் இருந்து 28 பயணிகளுடன் விமானம் நண்பகல் 12.40 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் இரண்டாவது விமானம், சென்னையில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு தூத்துக்குடி வந்து சோ்ந்தது. பின்னா் தூத்துக்குடியில் இருந்து மாலை 4.55 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
முதல் நாளில் பெங்களூரு விமான சேவை நடைபெறவில்லை. எனவே, திங்கள்கிழமை முதல் (மாா்ச் 31) ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி அனைத்து விமானங்களும் முறையாக இயக்கப்படும் என விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
