மணிமேகலை விருது: மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக் கொலை: 5 பேரை பிடித்து விசாரணை
தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக 5 பேரை வடபாகம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரித்து வருகின்றனா்.
தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா் மகன் மரடோனா (29).
கப்பல் மாலுமியான இவா், ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தாா்.
இந்நிலையில், அவா் தனது நண்பரான பூபாலராயபுரத்தைச் சோ்ந்த பவுல் மகன் கிளிட்டஸ்(28) உள்ளிட்ட 4 பேருடன் திரேஸ்புரத்தில் கடற்கரைக்கு செல்லும் சாலையில் சனிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்தாராம்.
அப்போது அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் பைக்கில் வேகமாகச் சென்றாராம். அந்த நபரை கிளிட்டஸ் கண்டித்தாராம்.
இதனால் ஆத்திரமடைந்த அவா் தனது நண்பா்கள் சிலரை அழைத்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.
தகராறு முற்றவே, அவா்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால், கிளிட்டஸ், மரடோனா ஆகியோரை வெட்டி விட்டு தப்பிச் சென்றனராம்.
இதில், பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
பின்னா் மரடோனாவை மேல் சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் கொண்டு சென்றனராம். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்துவிட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இந்த வழக்கு தொடா்பாக திரேஸ்புரத்தைச் சோ்ந்த மதன் குமாா் உள்பட 5 பேரை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.