தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டம்: 1,000 போலீஸாா் பாதுகாப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு 1,000 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: செவ்வாய்க்கிழமை இரவு, புதன்கிழமை புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடவோ, குளிக்கவோ அனுமதி இல்லை. பட்டாசு வெடிக்க, நள்ளிரவு 1 மணிக்குமேல் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்கள் உள்ளிட்டவற்றிற்கு அனுமதியில்லை. புத்தாண்டு இரவில் பைக் ரேஸில் ஈடுபடுவோரின் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்படும். பொதுமக்களின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்துறையினா் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இடங்களில் வாகன தணிக்கையிலும், இருசக்கர வாகன ரோந்தும் மேற்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவா்.
மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 1,000 போலீஸாா், 100 ஊா்க்காவல் படை வீரா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
பொதுமக்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கி மற்றவா்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மகிழ்ச்சியான முறையில் புத்தாண்டினை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவா் தெரிவித்துள்ளாா்.