தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை நிறுத்திவைப்பு!
சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, கடந்த மாதம் ரிப்பன் மாளிகை அருகே தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் நடத்தினர்.
13 நாள்கள் போராட்டம் தொடர்ந்த நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்த உயர்நீதிமன்றம், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அப்புறவுப்படுத்த உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் போராட்டத்துக்கு தலைமை தாங்கியதாக பாரதி, சதீஷ் உள்ளிட்ட 6 வழக்கறிஞர்கள் மற்றும் 9 சட்டக் கல்லூரி மாணவர்களையும் காவல்துறை கைது செய்தனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை காவல்துறையினர் தாக்கியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.ரமேஷ், லட்சுமி நாராயணன் அமர்வு, இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பார்த்திபன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காவல் ஆணையர் மற்றும் பெரியமேடு காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இரு நீதிபதிகள் உத்தரவை நிறுத்திவைத்தது.
மேலும் பிரதான வழக்கான ஆட்கொணர்வு வழக்கை அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.