தென்கொரிய விமான விபத்தில் இருவர் உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்தது எப்படி?
தென்கொரிய விமான விபத்தில் சிக்கி, அதிலிருந்த 179 பேர் பலியாகினர். ஆனால், விமானப் பணியாளர்கள் 2 பேர் மட்டுமே உயிர் தப்பிய நிலையில், அந்த அதிசயம் நிகழ்ந்தது எப்படி என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
விமானப் பணியாளர்கள் இருவரும் அமர்ந்திருந்த இருக்கைப் பகுதியானது விமானத்திலேயே மிகவும் பாதுகாப்பான பகுதியாக இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து நிகழ்ந்த போது, உயிர் தப்பிய இருவரும் தங்களது இருக்கையில் அமர்ந்திருந்ததால், ஒட்டுமொத்த விமானமும் சேதமடைந்த போதும், அந்த வால் பகுதி அருகே இருந்த இவர்கள் இருக்கை சேதமடையாததால் உயிர் தப்பியிருக்கிறார்கள்.
அதாவது, கடந்த ஞாயிறன்று, தென்கொரியாவின் முவான் சா்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற பயணிகள் விமானம், கான்கிரீட் சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் 85 பெண்கள் உள்பட 179 போ் உயிரிழந்தனா். 2 விமானப் பணியாளர்கள் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அந்த விமானத்தின் ஒட்டுமொத்த பகுதியும் எரிந்து நாசமான நிலையில், வால் பகுதி மட்டும் சேதமடையாமல் இருந்ததை விடியோக்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. எனவே, அந்த வால் பகுதிக்கு அருகே அவர்கள் அமர்ந்திருந்ததால்தான் உயிர்தப்பியதாகக் கூறப்படுகிறது.
தாய்லாந்திலிருந்து வந்த இந்த விமானம் தரையிறங்கும்போது முன் சக்கரம் செயலிழந்ததால் இந்த விபத்து நேரிட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 175 பயணிகள், 6 விமானப் பணியாளா்கள் உள்பட 181 போ் இந்த விமானத்தில் பயணித்து உயிருடன் மீட்கப்பட்ட விமானப் பணியாளர்களில் ஒருவரான 32 வயதாகும் லீ, மோக்போ கொரியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
.
லீ, தனக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் என்ன நடந்தது? நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று திரும்பத் திரும்ப மருத்துவர்களிடமும் மருத்துவப் பணியாளர்களிடமும் கேட்டுக்கொண்டே இருக்கிறார். ஆனால் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது குறித்து கேள்வி எழுப்பாததால், அவர் விமான விபத்தின் அதிர்ச்சியால் மனநிலை தடுமாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
விபத்திலிருந்து தப்பிய 25 வயது விமானப் பணிப்பெண்ணான க்வான், தலை, அடிவயிற்றில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரும், தனக்கு என்ன நேர்ந்தது என்பதை நினைவுகூர இயலாத நிலையில்தான் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன