கோவை மேம்பாலத்தில் கவிழ்ந்த எல்பிஜி டேங்கர் லாரி; பள்ளிகளுக்கு விடுமுறை... மீட்புப் பணி தீவிரம்..!
கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கோவை கணபதி பகுதியில் உள்ள குடோனுக்கு ஒரு எல்.பி.ஜி டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி இன்று அதிகாலை அவிநாசி சாலை பழைய மேம்பாலத்தில் செல்லும்போது ரவுண்டானா சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
டேங்கரில் இருந்து தொடர்ச்சியாக வாயு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் இறங்கினார்கள்.
தீயணைப்புத் தறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். கோவை மாநகரின் முக்கியமான சந்திப்பு என்பதால் போக்குவரத்து பாதிக்காத வகையில் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. மேம்பாலத்துக்கு செல்லும் அனைத்து சந்திப்புகளும் இரும்பு தடுப்புகளால் மூடப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 500 மீ தொலைவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் அறிவித்துள்ளார்.
சம்பவ இடத்தில் ஆய்வு செய்த கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “காலை 3 மணியளவில் விபத்து நடைபெற்றுள்ளது. வாயு கசிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. திருச்சி ஐஓசிஎல் நிறுவனத்தில் இருந்து மீட்பு வாகனம் வந்து கொண்டிருக்கிறது.
அதற்கு முன்பாக பம்ப் மூலம் வாயுவை அகற்றுவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் வந்துள்ளனர். ஒரு கிலோமீட்டர் சுற்றளவு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.“ என்றார்.