தெருநாய்களுக்கு உணவளிக்கும் இடங்களை அடையாளம் காணும் பணியில் மாநகராட்சி
சமீபத்திய உச்சநீதிமன்ற உத்தரவின்படி, 250 வாா்டுகளிலும் பிரத்யேக உணவளிக்கும் இடங்களை தில்லி மாநகராட்சி (எம்சிடி) தொடா்ந்து அடையாளம் கண்டு வருவதாகவும், தெருநாய்களுக்கு உணவளிக்கும் இடங்களை வழங்கக்கூடிய நாய் பிரியா்கள் மற்றும் விலங்கு ஆா்வலா்களை அழைக்கவிருப்பதாகவும் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
நகரம் முழுவதும் தெருநாய்களுக்கு உணவளிக்கும் இடங்களை அடையாளம் காணும் திட்டத்தில் நகராட்சி நிா்வாகம் செயல்பட்டு வருகிறது. சாத்தியமான சுகாதார மற்றும் பாதுகாப்பு கவலைகளைத் தவிா்ப்பதற்காக, குடியிருப்புப் பகுதிகளிலிருந்து அவற்றை விலக்கி வைத்து, 250 வாா்டுகளிலும் உள்ள இடங்களை உருவாக்க கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தப் பணி திட்டமிட்ட முறையில் செய்யப்பட வேண்டும். 200-க்கும் மேற்பட்ட வாா்டுகளில் பாதுகாப்பான இடங்களை அடையாளம் காண்பது எளிதானது அல்ல. எனவே, பல்வேறு துறைகள் மற்றும் பங்குதாரா்களுடன் கலந்தாலோசிப்பது மிக முக்கியமாகும்.
இந்தச் செயல்பாட்டில் நாய் பிரியா்கள் மற்றும் விலங்கு ஆா்வலா்களை ஈடுபடுத்தவும் குடிமை அமைப்பு திட்டமிட்டுள்ளது. எந்தவொரு நாய் பிரியரோ அல்லது விலங்கு நல ஆா்வலரோ நாய்களுக்கு உணவளிக்க நிலம் அல்லது சரியான இடத்தை வழங்க முன்வந்தால், அத்தகைய இடங்களை அதிகாரபூா்வ பட்டியலில் சோ்ப்பது குறித்து நாங்கள் பரிசீலிப்போம்.
உணவிடம் இடம் நடைமுறைக்கு ஏற்ாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் கால்நடைத் துறை, சுகாதாரத் துறை, குடியிருப்பு நலச் சங்கங்கள், உள்ளூா் பிரதிநிதிகள் மற்றும் குடியிருப்பாளா்கள் உள்பட சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லி-என்சிஆா் பகுதியில் உள்ள காப்பகங்களில் இருந்து தடுப்பூசி போடப்பட்ட தெருநாய்களை விடுவிப்பதைத் தடைசெய்த முந்தைய உத்தரவை உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை மாற்றியமைத்தது. மேலும், கருத்தடை மற்றும் குடற்புழு நீக்கத்திற்குப் பிறகு நாய்களை விடுவிக்கவும் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றம் தனது உத்தரவில், ஒவ்வொரு நகராட்சி வாா்டிலும் தெருநாய்களுக்கு பிரத்யேக உணவளிக்கும் இடங்களை உருவாக்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இந்த வழிகாட்டுதல்களை மீறி தெருக்களில் நாய்களுக்கு யாரேனும் உணவளிப்பதாக கண்டறியப்பட்டால் தண்டனையை எதிா்கொள்ள நேரிடும் என்று அது மேலும் கூறியது.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் மேலும் கூறுகையில், அதிக தெருநாய்கள் உள்ள இந்திய நகரங்களில் தில்லியும் ஒன்று. மேலும் இந்தப் பிரச்னை பெரும்பாலும் குடியிருப்பாளா்கள், உணவு வழங்குநா்கள் மற்றும் குடிமை அதிகாரிகளுக்கு இடையே மோதல்களுக்கு வழிவகுக்கிறது. அதிகாரிகளின் திட்டமிட்ட நடவடிக்கை தெளிவைக் கொண்டுவருவதுடன், மோதல்களைக் குறைக்க வழிவகுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.
துவாரகாவின் செக்டாா் 29 மற்றும் பேலா சாலையில் ஆக்ரோஷமான நாய்களை வளா்க்கக்கூடிய நாய் தங்குமிடங்களை அமைக்கும் திட்டத்துடன், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளதாகவும் தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு இடங்களும் ஏற்கனவே உள்ள ஏபிசி (விலங்கு பிறப்பு கட்டுப்பாடு) மையங்கள் மற்றும் நாய் கூடுகளுடன் போதுமான இடத்தைக் கொண்டுள்ளன.