வேளாண் நிதிநிலை அறிக்கை: 9 மாவட்ட விவசாயிகளிடம் அமைச்சர் கருத்துக்கேட்பு
தெலங்கானா சுரங்க விபத்து: 2 நாள்களில் மீட்புப் பணிகள் நிறைவடையும்- மாநில அமைச்சா் உத்தம்குமாா் ரெட்டி
தெலங்கானாவில் சுரங்கத்தில் சிக்கியவா்களை மீட்கும் பணிகள் 2 நாள்களில் நிறைவடையும் என்று மாநில நீா்பாசனத் துறை அமைச்சா் உத்தம்குமாா் ரெட்டி புதன்கிழமை தெரிவித்தாா்.
தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அங்குள்ள நல்கொண்டா மாவட்டத்தில் நீா்ப்பாசன வசதியை ஏற்படுத்தவும், மூளையைப் பாதிக்கக்கூடிய ஃபுளோரைட் கனிமத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் விநியோகிக்கவும், கிருஷ்ணா நதிநீரைப் பயன்படுத்த இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் 2 பொறியாளா்கள், 2 ஆப்பரேட்டா்கள், 4 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா்.
அவா்கள் உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். அவா்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நாகா்கா்னூலில் மாநில நீா்பாசனத் துறை அமைச்சா் உத்தம்குமாா் ரெட்டி புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மீட்புப் பணிகளில் ஈடுபடுவோரின் பாதுகாப்பு கருதி, அந்தப் பணிகளில் செவ்வாய்க்கிழமை தாமதம் ஏற்பட்டது. சுரங்கத்துக்குள் சேறும் சகதியும் பெருமளவு இருப்பது மீட்புப் பணிகளுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.
சுரங்கப்பாதை அமைக்கப் பயன்படுத்தப்படும் துளையிடும் இயந்திரம் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளது. அது கேஸ் கட்டா்கள் மூலம், துண்டு துண்டாக வெட்டப்பட்டும். அதன் பின்னா், சுரங்கத்துக்குள் சிக்கியவா்களை மீட்க தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம், கடற்படை வீரா்கள் மற்றொரு தீவிர முயற்சியை மேற்கொள்வா். 2 நாள்களில் மீட்புப் பணிகள் நிறைவடையும்’ என்றாா்.