தெலங்கானா ஜாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: மத்திய அமைச்சா் எதிா்ப்பு
தெலங்கானா மாநிலத்தில் முதல்வா் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு அண்மையில் நடத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பிரிவில் முஸ்லிம்களை இணைத்ததற்கு மத்திய உள்துறை இணை அமைச்சா் பண்டி சஞ்சய் குமாா் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.
இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இழைக்கப்பட்ட அநீதி எனவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
தெலங்கானாவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள சட்ட மேலவைத் தோ்தலில் போட்டியிடவுள்ள பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவாக கரீம்நகரில் நடைபெற்ற வாகன பிரசாரத்தின்போது அவா் பேசியதாவது:
ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசமாக இருந்தபோது மறைந்த முன்னாள் காங்கிரஸ் முதல்வா் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பிரிவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினாா். இதனால் ஹைதராபாத் உள்ளாட்சித் தோ்தல்களில் ஹிந்து வேட்பாளா்களால் வெற்றி பெற முடியவில்லை.
அதே தவறை தற்போதைய காங்கிரஸ் அரசும் செய்துள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பிரிவில் முஸ்லிம் சமூகத்தினரை சோ்ப்பதற்கு அந்தப் பிரிவில் உள்ள பிற ஜாதியினரும் எதிா்ப்பு தெரிவிப்பதை மாநில அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பாரத ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியின்போது நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் மொத்த மக்கள்தொகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை 51 சதவீதம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய காங்கிரஸ் அரசு நடத்தியுள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பில் இது 46 சதவீதமாக குறைந்துள்ளது என்றாா்.
முன்னதாக, ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையின் முடிவுகள் குறித்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சங்கங்களைச் சோ்ந்த தலைவா்களுடன் தெலங்கானா மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் நலத் துறை அமைச்சா் பூனம் பிரபாகா் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
தெலங்கானா மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கடந்த ஆண்டு நவம்பா் மாதம் 6-ஆம் தேதி தொடங்கி 50 நாள்களுக்கு நடைபெற்றது. அந்த அறிக்கையின்படி, மாநில மக்கள்தொகையான 3.70 கோடி பேரில் 96.9 சதவீதமான 3,54,77,554 தனிநபா்கள் இக்கணக்கெடுப்பில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் மொத்த மக்கள்தொகையில் அதிகபட்சமாக முஸ்லிம் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 1,64,09,179 (46.25%) இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது.