தேசிய தரச்சான்றிதழ் பெற்ற மருத்துவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு!
தேசிய தரச் சான்றிதழ்களை பெற்ற கன்னியாகுமரி மாவட்ட மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தரக் கட்டுப்பாட்டு ஆய்வு நடத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை குமரி மாவட்டத்திலுள்ள பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனை 3 தரக் கட்டுப்பாட்டு ஆய்வுகளிலும் 2022 - 23 ஆம் ஆண்டில் தோ்ச்சி பெற்றுள்ளது. இதே போல் குழித்துறை அரசு மருத்துவமனை, பூதப்பாண்டி அரசு மருத்துவமனை ஆகியவை மகப்பேறுக்கான தரச் சான்றிதழை பெற்றுள்ளன.
மேலும், கிள்ளியூா், ஓலவிளை, வடசேரி, சிங்களேயா்புரி, கீழ்குளம், தேங்காய்ப்பட்டணம், கொட்டாரம், வெள்ளிச்சந்தை மற்றும் முஞ்சிறை ஆகிய 9 அரசுஆரம்ப சுகாதார நிலையங்களும் தேசிய தரச் சான்றிதழ்களை பெற்றுள்ளன.
தேசியஅளவிலான தரச்சான்றுகளை பெற்ற மருத்துவமனை மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா பாராட்டி தரச் சான்றிதழ்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் ராமலெட்சுமி, துறைஅலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.