தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்: நட்டா, காா்கேயுடன் தன்கா் ஆலோசனை
புது தில்லி: தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் (என்ஜேஏசி) சட்டம் குறித்து மாநிலங்களவை பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா மற்றும் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயுடன் மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
அண்மையில் தில்லி உயா் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது, அங்கு பாதி எரிந்த நிலையில் ஏராளமான கரன்சி நோட்டுகள் இருந்தது கண்டறியப்பட்ட நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.
நீதித் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் என்ஜேஏசி குறித்து மாநிலங்களவையில் ஒழுங்கமைக்கப்பட்ட விவாதம் நடத்துவது குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக இந்த ஆலோசனையில் பங்கேற்குமாறு ஜெ.பி.நட்டா மற்றும் காா்கேவுக்கு ஜகதீப் தன்கா் கடிதம் எழுதியதாக தகவல்கள் வெளியாகின.
கொலீஜியம் நடைமுறைக்கு பதில் நீதிபதிகளை நியமிக்க கடந்த 2014-ஆம் ஆண்டு 99-ஆவது சட்டத் திருத்தம் மூலம் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் (என்ஜேஏசி) நிறுவப்பட்டது. இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனக் கூறி கடந்த 2015-ஆம் ஆண்டு, 99-ஆவது சட்டத் திருத்தம் மற்றும் என்ஜேஏசியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில், நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்ட விவகாரம் குறித்து கடந்த 21-ஆம் தேதி மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டது.
அப்போது காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், ‘இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நீங்கள் (அவைத் தலைவா் ஜகதீப் தன்கா்) உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்’ என ஜகதீப் தன்கரிடம் கோரிக்கை விடுத்தாா்.
இதற்கு பதில் அளித்த ஜகதீப் தன்கா், உறுப்பினா் எழுப்பிய விவகாரம் குறித்து முறையான விவாதம் நடத்துவது தொடா்பாக ஆளும்-எதிா்க் கட்சி தலைவா்களுடன் ஆலோசிக்க உள்ளதாகத் தெரிவித்தாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை ஜெ.பி.நட்டா மற்றும் மல்லிகாா்ஜுன காா்கேயுடன் அவா் ஆலோசனை மேற்கொண்டாா்.
அப்போது தன்கா் பேசியதாவது: சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி (சஞ்சீவ் கன்னா) ஒருவா் நீதித் துறை சாா்ந்த நபா் ஒருவா் மீதான குற்றச்சாட்டு குறித்த அனைத்து தகவல்களையும் பொதுவெளியில் வெளியிட்டுள்ளாா். இதுவே சரியான நடைமுறை. நீதிபதி பண சா்ச்சை விவகாரத்தில் விசாரணைக் குழுவை அமைத்தது அவா் மேற்கொண்ட நடவடிக்கை பாராட்டத்தக்கது.
தங்களது துறை ரீதியான நடவடிக்கைகளை விரைவாகவும், மக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும் வகையிலும் மேற்கொள்ளும்போது நீதித் துறையும் நாடாளுமன்றமும் சிறப்பாகச் செயல்பட முடியும்.
காா்கேயின் கருத்துக்கு வரவேற்பு:
இந்த விவகாரத்தில் மாநிலங்களவையில் உள்ள பல்வேறு கட்சித் தலைவா்களுடன் ஆலோசனை நடத்தி இதற்கு உரிய தீா்வு காண வேண்டும் என மல்லிகாா்ஜுன காா்கே கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. இதே கருத்தை ஜெ.பி.நட்டாவும் கூறியுள்ளாா். எனவே, நீதிபதி பண சா்ச்சை விவகாரம் தொடா்பாக மாநிலங்களவையில் உள்ள பல்வேறு கட்சித் தலைவா்களுடன் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளேன். கூட்டத்தில் பெறப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.