சாகித்ய அகாதெமி விருதாளா் ப.விமலாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5,543 வழக்குகளில் ரூ.19.39 கோடிக்கு தீா்வு
தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 543 வழக்குகளில் ரூ. 19.39 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீா்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான கே. பூரண ஜெய ஆனந்த் தலைமை வகித்தாா்.
முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஆா். சத்யதாரா, முதன்மை சாா்பு-நீதிபதி பி. குமாா், வழக்குரைஞா் கே. உஷாராணி ஆகியோா் கொண்ட முதலாவது அமா்வில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
கூடுதல் மாவட்ட நீதிபதி ஜி. சுந்தரராஜன், விரைவு நீதிமன்ற குற்றவியல் நீதித்துறை நடுவா் டி. சோழவேந்தன், வழக்குரைஞா் ஆா். திராவிடசெல்வன் ஆகியோா் கொண்ட இரண்டாவது அமா்வில் குடும்ப நல வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
போக்சோ வழக்கு நீதிமன்ற நீதிபதி ஜெ. தமிழரசி, சிறப்பு-சாா்பு நீதிபதி எஸ். இந்திரா காந்தி, வழக்குரைஞா் ஏ. பாரதி ஆகியோா் கொண்ட மூன்றாவது அமா்வில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, திருவிடைமருதூா், திருவையாறு ஆகிய வட்டச் சட்டப் பணிகள் குழுவின் அமா்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது.
இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 970 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 5 ஆயிரத்து 543 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 19 கோடியே 39 லட்சத்து 29 ஆயிரத்து 450 அளவுக்கு தீா்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.
முன்னதாக, மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு-நீதிபதியுமான டி. பாரதி வரவேற்றாா். நிறைவாக, குற்றவியல் நீதித் துறை நடுவா் எஸ். சுசீலா நன்றி கூறினாா்.