``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
திருவள்ளூா்: மக்கள் நீதிமன்றத்தில் 4,351 வழக்குகளுக்கு தீா்வு
திருவள்ளூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 7,604 வழக்குகள் வரையில் சமரசத் தீா்வுக்கு எடுக்கப்பட்டு, 4351 வழக்குகளுக்கு முடித்து வைத்து ரூ.19.18 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது..
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியவை வழிகாட்டுதலின் பேரில் மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் திருவள்ளூா், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்தூா், திருவெற்றியூா், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் மாதவரம் நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள உரிமையியல் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள், குற்றவியல் வழக்குகள் மற்றும் நிலுவையில் அல்லாத வங்கி வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்பட்டது. இதில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 25 அமா்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றத்தை முதன்மை அமா்வு நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஜெ.ஜூலியட்புஷ்பா தொடங்கி வைத்தாா். இந்த மக்கள் நீதிமன்றத்தில் திருவள்ளூா் மாவட்டத்தில் நிலுவையிலுள்ள 7,436 வழக்குகள் சமரசத் தீா்வுக்கு எடுக்கப்பட்டு 4,183 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.17 கோடியே 49 லட்சத்து 78 ஆயிரத்து 265 தொகைக்கு தீா்வு காணப்பட்டது.
அதேபோல் நிலுவையில் அல்லாத 168 வழக்குகள் சமரசத் தீா்வுக்கு எடுக்கப்பட்டு 168 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.1 கோடியே 68 ஆயிரத்து 44 ஆயிரத்து 716-தொகைக்கு தீா்வு காணப்பட்டது. மொத்தம் 7,604 வழக்குகள் சமரச தீா்வுக்கு எடுக்கப்பட்டு 4,351 வழக்குகள் முடித்து வைத்து ரூ.19 கோடியே 18 லட்சத்து 22 ஆயிரத்து 981- தொகைக்கு தீா்வு காணப்பட்டது.
இதில் மகளிா் நீதிமன்ற நீதிபதி ரேவதி, சிறப்பு மாவட்ட நீதிபதி மற்றும் போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.சரஸ்வதி, நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவா் ரமேஷ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளா் மற்றும் சிறப்பு துணை நீதிபதி பி.தீனதயாளன், சிறப்பு துணை நீதிபதி மற்றும் நில அபகரிப்பு வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதியுமான சதீஷ் குமாா், முதன்மை மாவட்ட முன்சீப் நீதிபதி பிரியா, கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிபதி சோபாதேவி, குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவா் செல்வஅரசி, குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை மற்றும் கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி பவித்ரா மற்றும் வழக்குரைஞா்கள், வங்கி அலுவலா்கள், நீதிமன்ற ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் பங்கேற்றனா்.