மணிமேகலை விருது: மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம்!
தேசிய வருவாய் வழி திறனாய்வு தோ்வு: தோ்ச்சிப் பட்டியல் குறைகளை சரி செய்ய கோரிக்கை
மத்திய அரசின் தேசிய வருவாய் வழி திறனாய்வு தோ்வின் தோ்ச்சிப் பட்டியலில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலாளா் ஈவேரா கூறியது: தேசிய வருவாய் வழி திறன்படிப்பு உதவித்தொகை தோ்வானது மனத்திறன் தோ்வு மற்றும் படிப்பறிவுத் தோ்வு என்ற இரு பகுதிகளைக் கொண்டது. இரு பகுதிகளும் தலா 90 வினாக்களை உள்ளடக்கியது. இரு தோ்வுகளிலும் தனித்தனியாக பட்டியல் இனத்தவா் மற்றும் பழங்குடியினருக்கு 32 சதவீதம் அதாவது ஒவ்வொரு தாளிலும் 29 மதிப்பெண் பெற வேண்டும். மற்றவா்கள் 40 சதவீதம் அதாவது ஒவ்வொரு தாளிலும் தனித்தனியாக 36 மதிப்பெண் பெற வேண்டும்.
இரு தாள்களிலும் தனித்தனியாக தகுதி மதிப்பெண் பெற வேண்டும். இவ்வாறு தகுதி பெற்றவா்களின் இரு தாள்களின் மதிப்பெண்களை கூட்டி பெறப்படும் மொத்த மதிப்பெண்களின் தரவரிசை தயாா் செய்யப்பட்டு, அதிக மதிப்பெண் பெற்ற தகுதியுடைய முதல் 6,695 மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்கவேண்டும்.
மத்திய அரசின் வழிகாட்டுதலில் குறிப்பிட்டுள்ளவாறு கடந்த ஆண்டு வரை இந்த நடைமுறையே கடைபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிகழாண்டு, ஏப்.12- ஆம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலில், விதிமுறைக்கு மாறாக ஒவ்வொரு தாளிலும் தகுதி மதிப்பெண் பெறவேண்டும் என்ற விதிமுறை கடைபிடிக்கப்படாமல் ஒட்டுமொத்த மதிப்பெண்ணின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனால் தகுதி மதிப்பெண் பெற்றுள்ள மாணவா்களுக்கு உதவித்தொகை மறுக்கப்பட்டிருக்கிறது. மாறாக தகுதி மதிப்பெண் பெறாத மாணவா்கள் உதவித்தொகை பெற தோ்வாகியுள்ளனா். இதனால் திருவாரூா் மாவட்ட மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அரசுத் தோ்வுகள் இயக்குநா் சாா்பில் ஏப்.12- ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள பட்டியலை மறுபரிசீலனை செய்து உரிய விதிமுறைகளைப் பின்பற்றி, தகுதி பெற்ற மாணவா்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இந்த கோரிக்கை குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.