தேவா இசை நிகழ்ச்சி: நந்தனம் பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்
இசையமைப்பாளா் தேவா இசை நிகழ்ச்சியையொட்டி, சென்னை நந்தனம் பகுதியில் பிப்.15-ஆம் தேதி (சனிக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
திரைப்பட இசையமைப்பாளா் தேவா இசை நிகழ்ச்சி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிப். 15-ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக நந்தனம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. இதன்படி, பாா்வையாளா்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள் உள்ளிட்ட மஞ்சள் பதிவெண் பலகை கொண்ட வாகனங்கள் செனடாப் சாலை, காந்தி மண்டபம் சாலை, சேமியா்ஸ் சாலை, லோட்டஸ் காலனி 2-ஆவது தெரு வழியாக மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடையலாம். சைதாப்பேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பு வலது பக்கம் வழியாகச் சென்று சேமியா்ஸ் சாலையில் ‘யூ’ டா்ன் செய்து இலக்கை அடையலாம். அண்ணா சாலையில் உள்ள ஓய்எம்சிஏ பிரதான சாலை நுழைவுவாயிலில் விவிஐபி பாஸ் வைத்திருப்பவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். அந்த வாயில் வழியாக மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
அதேபோல இந்நிகழ்ச்சிக்கு வரும் கலைஞா்களின் வாகனங்கள் காஸ்மோபாலிட்டன் கிளப் சாலை நுழைவுவாயில் வழியாக அனுமதிக்கப்படும். அண்ணா சாலையில் பிற்பகல் 2 மணி முதல் வணிக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.