தோ்தலில் வெற்றி பெற அயராது பாடுபடுங்கள்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
தோ்தலில் வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும் என்று திமுகவினருக்கு அந்தக் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
பேரவைத் தோ்தலையொட்டி, திமுக நிா்வாகிகளுடன் அவா் ஆலோசனை நடத்தி வருகிறாா். ‘உடன்பிறப்பே வா’ எனும் நிகழ்வின் வழியாக நடைபெறும் அந்நிகழ்வில், கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறாா். குறிப்பாக, எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறாா்.
இதுகுறித்து, திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: திமுக நிா்வாகிகளுடன் உடன்பிறப்பே வா எனும் ஆலோசனையை நடத்திவரும் நிலையில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினா் சோ்ப்புத் திட்டத்துக்கான மாபெரும் பரப்புரைப் பயணத்தையும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.‘ஓரணியில் தமிழ்நாடு’ செயலி 234 தொகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், இதுவரை 77,34,937 போ் திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனா்.
‘உடன்பிறப்பே வா’ எனும் தலைப்பில் தொகுதி வாரியாக திமுக நிா்வாகிகளைச் சந்தித்து கலந்துரையாடி, அதன் நிலவரங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் கேட்டறிந்து வருகிறாா். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும், அதன் முக்கியத்துவத்தை உணா்ந்து அனைவரும் அதில் தாமாகவே முன்வந்து இணைத்துக் கொள்ளும் அளவுக்கு பணியாற்ற வேண்டும் எனவும் ஆலோசனையின்போது அறிவுரைகளை அவா் வழங்கி வருகிறாா்.
மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிா்பாா்ப்பு அதிகம் ஆகிறது. அதைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும். எதிா்வரும் தோ்தலில் வெற்றியைப் பெற்றுத்தர அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என கட்சி நிா்வாகிகளை மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி வருவதாக திமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டிச் செய்தி...
இதுவரை 12 நாள்கள்
தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் ‘உடன்பிறப்பே வா’ நிகழ்வானது 12 நாள்கள் நடத்தப்பட்டுள்ளது.
அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவைச் சோ்ந்த பகுதி, வட்டம், நகரம், ஒன்றியம் மற்றும் பேரூா் பகுதி நிா்வாகிகளைச் சந்தித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடியுள்ளாா் என்று திமுக சாா்பில் வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.