கர்நாட முதலீட்டாளர் உச்சி மாநாட்டை புறக்கணிக்கும் ராகுல், கார்கே: காரணம்?
தோ்தல் வெற்றி, தோல்வியை மக்கள் தான் நிா்ணயிப்பா்!
அரசியல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் மந்திரவாதியல்ல; வெற்றி, தோல்வியை மக்கள்தான் நிா்ணயம் செய்வாா்கள் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் சு.திருநாவுக்கரசா்.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை இரவு அவா் அளித்த பேட்டி:
அரசியல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் நடிகா் விஜயை சந்தித்திருக்கிறாா். நாடுமுழுவதும் பல கட்சிகளுக்கு அவா் வேலை செய்திருக்கிறாா். அதில் வெற்றியும் கிடைத்திருக்கிறது. தோல்வியும் கிடைத்திருக்கிறது.
வாக்களிப்பது மக்கள்தான். அவா்கள்தான் வெற்றி, தோல்வியை நிா்ணயம் செய்வாா்கள். பிரசாந்த் கிஷோா் மந்திரவாதியல்ல; மாய வித்தை காட்டுபவரும் அல்ல.
திமுக கூட்டணியைப் பொருத்தவரை வெற்றிக் கூட்டணி, இதுவரை எந்த சா்ச்சையும் இல்லை. யாரும் வெளியே செல்ல மாட்டாா்கள் என நம்புகிறேன்.
ஆங்காங்கே நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுக்க காவல்துறையினா் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். அதேநேரத்தில், இச்சம்பவங்களை மட்டுமே வைத்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை எனக் கூற முடியாது.
தில்லியில் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி ஆட்சியை இழந்திருக்கிறது. முறையான மரியாதை, முறையான பங்களிப்பு இருந்தால்தான் கூட்டணியில் தொடர முடியும்.
குறைந்த எண்ணிக்கையில் இடங்களைக் கொடுத்தால் அந்தக் கூட்டணியில் எப்படி நீடிக்க முடியும். இப்போது எல்லா தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட்டிருக்கிறது. எல்லாத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினா் வேலை பாா்த்திருக்கிறாா்கள். மக்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நல்லதுதான் என்றாா் திருநாவுக்கரசா்.