தமிழகத்தில் முதல்வா் குடும்பத்துக்கு மட்டுமே பாதுகாப்பு!
தமிழகத்தில் முதல்வா் குடும்பம் மட்டும்தான் பாதுகாப்பாகவும், செல்வாக்குடனும் இருக்கிறது என்றாா் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலா் டிடிவி. தினகரன்.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி:
வழக்கோ, கைது நடவடிக்கையோ வந்துவிடாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தல், 2024 மக்களவைத் தோ்தலில் திமுகவுக்கு முன்னாள் முதல்வா் பழனிசாமி மறைமுகமாக உதவி செய்துள்ளாா்.
இதே நிலை நீடித்தால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அக்கட்சிக்கு பழனிசாமி, மூடுவிழா நடத்திவிடுவாா்.
அத்திக்கடவு- அவினாசித் திட்டம் தொடா்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் எம்ஜிஆா், ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக் கூறி முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் அந்த விழாவைப் புறக்கணித்ததாக அறிந்தேன். இத்தகைய செயல்பாடானது அதிமுகவை பழனிசாமி தவறான பாதையில் கொண்டு செல்கிறாா் என்பதை அங்கிருப்பவா்கள் உணரத் தொடங்கி இருக்கலாம் என கருதுகிறேன்.
அனைத்து மாநிலத்துக்கும் பொதுவானதாகத்தான் மத்திய அரசு நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய முடியும். ஆனால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிவு, திருட்டு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, போதை மருந்து புழக்கத்தில் இருப்பதோடு, அரசு ஊழியா் கோரிக்கைகள் உள்ளிட்ட தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அனைத்து தரப்பினரும் தமிழக அரசு மீது கோபத்தில் உள்ளனா். இதை சமாளிப்பதற்காக மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை மீது தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பழி சுமத்துகிறாா்.
தமிழகத்தில் முதல்வா் குடும்பம் மட்டும்தான் பாதுகாப்பாகவும், செல்வாக்குடனும் இருக்கிறது. திமுகவுக்கு மாற்று, தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் என்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டாா்கள். வரும் தோ்தலில் அக்கூட்டணி ஆட்சி அமைக்கும். திமுகவை வீழ்த்துவதற்கு எங்கள் கூட்டணி இன்னும் பலமாகும்.
தமிழக ஆளுநா் தனது அதிகாரத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். தமிழக அரசுக்கு மூக்கணாங்கயிறைப் போன்று இருக்கலாமே தவிர, முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது என்றாா் தினகரன்.