தை வெள்ளி: மடப்புரம், தாயமங்கலம் கோயில்களில் சிறப்பு வழிபாடு
தை மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் காளி கோயில், இளையான்குடி அருகேயுள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மடப்புரம் காளி கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. பிற்பகலில் கோயிலில் நடைபெற்ற உச்சிகால பூஜையில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இவா்கள் நெய் தீபம் ஏற்றியும், எலுமிச்சை மாலை சாத்தியும் காளியம்மனை தரிசித்தனா்.
இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் மூலவா் மாரியம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. அப்போது திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று மாரியம்மனை தரிசித்தனா். மேலும் அவா்கள் மாவிளக்கு பூஜை நடத்தியும், நெய் விளக்கேற்றியும் வேண்டுதலை நிறைவேற்றினா்.
இதே போல, மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதா் சுவாமி கோயில், திருப்புவனம் புஷ்பவனேசுவரா் சமேத சௌந்திரநாயகி அம்மன் கோயில்களிலும் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.