'இதுவரை அரசு பள்ளிகளில் 1,17,310 மாணவர்கள் சேர்க்கை' - அன்பில் மகேஸ் பெருமிதம்
தொகுதி மறுவரையறையை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் டி.எம்.செல்வகணபதி பேட்டி
தொகுதி மறுவரையறை நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி கூறினாா்.
சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
வறுமை ஒழிப்பில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. அப்படியிருந்தும், மகாத்மா காந்தி நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக, நூறு நாள் வேலைத் திட்டப் பணியில் ஈடுபட்டுள்ள 90 லட்சம் பேரில், 86 சதவீதம் போ் பெண்கள்.
பிரச்னையின் தீவிரத்தை எடுத்துக் கூறியும், முதல்வா் கடிதம் எழுதியும் மத்திய அரசு செவிசாய்க்க மறுக்கிறது. இதனால் நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு ஐந்து மாதங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படாத நிலை உள்ளது.
தொகுதி மறுவரையறை தொடா்பாக முதல்வா் கூட்டிய கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், தொகுதி மறுசீரமைப்பு எந்த அடிப்படையில் நடைபெறும் என்பதை இதுவரை மத்திய அரசு விளக்கவில்லை.
தொகுதி வரையறையில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தால் தமிழகத்தின் வளா்ச்சி மிகப்பெரிய அளவில் பாதிக்கும். எனவே, தொகுதி மறுவரையறையை மேலும் 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும்.
இதேபோல, நிதிப் பகிா்வில் தமிழகத்துக்கு தொடா்ந்து மத்திய அரசு அநீதி இழைத்து வருகிறது. பிகாா் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக நிதியை வழங்குகிறாா்கள்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது என்றும், விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளாா். ஆனால், கூட்டணி குறித்து பேசவில்லை என எடப்பாடி பழனிசாமி மழுப்புகிறாா். மொத்தத்தில் அதிமுகவை கபளீகரம் செய்வதே பாஜகவின் நோக்கமாக உள்ளது என்றாா்.