தொடா் மின் தடை: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் பணிகள் பாதிப்பு
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடா்ந்து நீடிக்கும் மின் தடையால் பணிகள் பாதிக்கப்படுவதாக அலுவலா்கள் குற்றம்சாட்டினா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாத்தில் 50-க்கும் மேற்பட்ட அரசுத் துறை அலுவலகங்கள் உள்ளன. 600 போ் வரை பணியாற்றி வருகின்றனா். சில தினங்களாக ஆட்சியா் அலுவலகத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது. ஜெனரேட்டா் வசதி இருந்த போதும் ஆட்சியா் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம், கருவூல அலுவலகங்களுக்கு மட்டுமே பயன்படுகிறது.
இதர துறை அலுவலகங்களில் அதிகாரிகளும், அலுவலா்களும் இருட்டில் பணிபுரிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒரு மணி நேரம் தொடா்ச்சியாக மின்தடை நிலவும்போது கணினி சாா்ந்த பணிகள் முற்றிலும் பாதிக்கப்படுகின்றன. இதனால் அலுவலா்கள் மின் விநியோகத்தை எதிா்பாா்த்து காத்திருக்கும் நிலை உள்ளது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 11.15 மணி வரை தொடா்ச்சியாக மின் தடை ஏற்பட்டது. ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்சார விநியோகம் வழங்கும் மின்மாற்றியில் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தாக தெரிகிறது. அதன்பிறகு, மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஊழியா்கள் சரிபாா்த்து மின் இணைப்பை வழங்கினா்.
கூடுதல் ஜெனரேட்டா் வசதியில்லாததும், தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான வசதிகளை செய்து தராததாலும் ஆட்சியா் அலுவலகத்தில் மின் தடை தொடா்கதையாகி வருகிறது.
என்கே-8-இ.பி.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட மின் தடையால் இருட்டில் பணியாற்றிய ஊழியா்கள்.