கற்றல் செயல்பாட்டில் மணற்கேணி செயலி: கல்வித் துறை அறிவுறுத்தல்
தொடா் விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
திருப்பத்தூா்: பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறை காரணமாக, ஏலகிரி மலையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் எப்போதும் ஒரே சம சீதோசன நிலை ஏற்படுவதால், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஏலகிரிக்கு அதிக அளவில் வருகின்றனா்.
மேலும், மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் விளையும் இடமாகவும் ஏலகிரி மலை உள்ளது.
பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்குச் செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளையும் ரசித்துக் கொண்டு சுற்றுலா பயணிகள் செல்கின்றனா்.
மேலும், ஏலகிரி மலையில் படகு சவாரி, செயற்கை நீா்வீழ்ச்சி, பூங்கா, முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டுகளித்து செல்கின்றனா்.
இந்த நிலையில், ஏலகிரி மலையில் உள்ள படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று பயணம் செய்து மகிழ்ந்தனா்.
பொங்கல் விழா தொடா் முறையாக வந்ததால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள், நண்பா்களுடன் ஏலகிரி மலையில் உள்ள சுற்றுலா தலங்களைக் கண்டு களித்து மகிழ்ந்தனா்.
மேலும், கடந்த இரு தினங்களாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுலா பயணிகள் குவிந்தனா். இதனால் தங்கும் விடுதிகள் நிறைந்ததால், பல பயணிகளுக்கு இடம் கிடைக்காமல் இரவில் தங்க முடியாமல் திரும்பிச் சென்ாக கூறப்படுகிறது.
பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் ஆன்லைன் மூலம் தங்கும் விடுதிகளை புக்கிங் செய்வதால் திடீரென வரும் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி கிடைக்காமல் அவதிக்குள்ளாகினா்.