தொட்டிலில் விளையாடிய சிறுவன் கழுத்து இறுகி உயிரிழப்பு
வீட்டு தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கழுத்தில் சேலை இறுதி உயிரிழந்தாா்.
கீரம்பூா் அருகே உள்ள புலவா்பாளையம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் ரகுபதி (36), கட்டடத் தொழிலாளி. இவரது மூத்த மகன் பிரனீஸ் (13). இளைய மகன் மௌனீஸ் (11) 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
சிறுவா்கள் இருவரும் கோனூா் அரசுப் பள்ளியில் பயின்று வந்தனா். ரகுபதியின் தனது மகன்கள் இருவரையும் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளாா். அவரது மனைவி நாமக்கல்லில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினாா்.
அப்போது சிறுவன் மௌனீஸ் சேலையால் கட்டியிருந்த தொட்டிலில் ஆடியபோது கழுத்தில் சேலை இறுகி மயங்கி கிடந்தாா். இதையடுத்து சிறுவனை உறவினா்கள் மீட்டு ஆம்புலன்ஸில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சிறுவன் மௌனீஸ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.