தொழிற்சங்கம் தொடங்கிய விமான நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் பணி நீக்கம்
சென்னை விமான நிலையத்தின் சரக்குகள் கையாளும் 9 ஒப்பந்தப் பணியாளா்கள் தொழிலாளா்கள் சங்கம் தொடங்கியதாக பணி நீக்கம் செய்யப்பட்டனா்.
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த முனையங்களில் ஏராளமான தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனா். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தின் சரக்குகள் கையாளும் பகுதியில் பணியாற்றி வந்த 9 போ், தொழிலாளா்கள் சங்கம் தொடங்கினா் என்பதற்காக குறிப்பிட்ட ஒப்பந்த நிறுவனம் அவா்களை பணி நீக்கம் செய்துள்ளது.
இதுகுறித்து ஏஐடியுசி-யின் கீழ் செயல்படும் சென்னை விமான நிலைய சரக்குப் போக்குவரத்துத் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் கூறியது:
சென்னை விமான நிலையத்தின் சரக்குப் போக்குவரத்தை ஏஏஐ காா்கோ லாஜிஸ்டிக்ஸ் அல்லீட் சா்வீசஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் கையாண்டு வருகிறது. இதில் பணியாற்றும் தொழிலாளா்கள் பெரும்பாலானோா் தொழிற்சங்கங்களில் உறுப்பினா்களாக உள்ளனா். இந்நிலையில், ஒப்பந்த நிறுவனத்துக்கும் சங்கத்தினருக்கும் நல்லுறவு ஏற்படும் வகையில் சங்கம் சாா்பில் ஊழியா்கள் ஒரு தகவல் கடிதத்தை ஒப்பந்த நிறுவனத்தின் மனிதவள பிரிவுக்கு அனுப்பினா்.
இந்தக் கடிதத்தைப் பாா்த்த ஒப்பந்த நிறுவனம் அதில் குறிப்பிடப்பட்டுள்ள 9 ஊழியா்களையும், சங்கம் தொடங்கினாா்கள் என்பதற்காக பணி நீக்கம் செய்துள்ளனா். இது அரசியலமைப்பை மீறும் செயலாகும். பணி நீக்கம் செய்யப்பட்டவா்களை மீண்டும் பணியமா்த்த விமான நிலைய நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.