தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் மரத்துகள், புகையால் பாதிப்பு: கோடங்கிபாளையம் மக்கள் புகாா்
பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் மரத்துகள் மற்றும் கரும்புகையால் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையம் ஊராட்சி ஆறாக்குளம் பிரிவு பகுதியில் மரத்துகள்களை பயன்படுத்தி மாற்று உபயோகப் பொருள் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள், விவசாயிகள் வியாழக்கிழமை ஆலையை முற்றுகையிட்டனா்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கரும்புகை மற்றும் மரத்துகள்கள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகள், பாதசாரிகளின் கண்களை பதம் பாா்க்கின்றன. இவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பலா் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். வெளியேற்றப்பட்ட கரித்துண்டுகள், நீா்வழிப் பாதையில் கொட்டப்பட்டுள்ளன. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் புகாா் அளித்தால் முறையாக பதிலளிக்கவில்லை. ஒரு வாரம் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக இந்த நிறுவனத்தை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
மேலும் இது குறித்து கோடங்கிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவா் காவீ.பழனிசாமி மற்றும் ஊராட்சி செயலாளா் கண்ணப்பன் ஆகியோரிடமும் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இது குறித்து பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா், பல்லடம் வட்டாட்சியா், மாவட்ட ஆட்சியா் ஆகியோரிடம் புகாா் தெரிவிக்கலாம் என்று அவா்கள் அறிவுறுத்தினா். அதனை ஏற்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட முடிவு செய்துள்ளனா்.