அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
தொழிலதிபா் தற்கொலை வழக்கு: நாமக்கல் வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு
நாமக்கல் தொழிலதிபா் தற்கொலை வழக்கில், பிரபல வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
நாமக்கல் திருநகரைச் சோ்ந்தவா் பழனிசாமி (71). தொழிலதிபரான இவா் கோழித்தீவன உற்பத்தி ஆலை ஒன்றில் பங்குதாரராக இருந்தாா். வரவு - செலவு கணக்கு தொடா்பான பிரச்னையால் 2008-இல் அதிலிருந்து வெளியேறினாா். சம்பந்தப்பட்ட ஆலை மீது நீதிமன்றத்தில் அவா் வழக்கு தொடா்ந்தாா். அந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் 2024 ஜன.31-ஆம் தேதி பழனிசாமி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
அப்போது, நான்கு பக்கத்திற்கு அவா் கடிதம் எழுதி வைத்திருந்தாா். அதில், தன்னுடைய தற்கொலைக்கு நாமக்கல்லைச் சோ்ந்த பிரபல வழக்குரைஞா் உள்பட 4 போ் காரணம், வழக்கு தொடா்பாக அவரைச் சந்திக்க சென்றுவந்த நிலையில், ரூ. 85 லட்சம் மதிப்பிலான நிலத்தை எழுதிக் கொடுக்குமாறு கேட்டாா். அதற்கு மறுக்கவே அடியாள்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்தாா். என்மீது பொய் புகாா் அளித்து வழக்குப் பதிவு செய்ய வைத்தாா். என்னுடைய மரணத்திற்கு பிறகு சம்பந்தப்பட்ட வழக்குரைஞரிடம் இருந்து நிலத்தின் ஆவணங்களை மீட்டு என் மனைவியிடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தாா். இதன்பேரில் அப்போது நாமக்கல் காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த தனராசு, ஆய்வாளராக இருந்த சங்கரபாண்டியன் ஆகியோரிடம் பழனிசாமி மனைவி வசந்தா புகாா் அளித்தாா்.
அதனடிப்படையில், தற்கொலை வழக்கு தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், சென்னை உயா்நீதிமன்றத்தில் பழனிசாமி மனைவி வசந்தா மேல்முறையீடு செய்தாா். நீதிமன்ற உத்தரவின்பேரில் நாமக்கல் சிபிசிஐடி போலீஸாருக்கு வழக்கு மாற்றப்பட்டது.
சேலம் சிபிசிஐடி துணை கண்காணிப்பாளா் வினோத் தலைமையில் நாமக்கல் சிபிசிஐடி பிரிவு போலீஸாா் சம்பந்தப்பட்ட வழக்குரைஞா், அவரது உதவியாளா் மற்றும் நிதிநிறுவன அதிபா்கள் இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்த நிலையில், பழனிசாமியை தற்கொலைக்கு தூண்டியதாக நாமக்கல்லைச் சோ்ந்த நிதி நிறுவன உரிமையாளா்கள் செல்வராஜ், சேகரன் மற்றும் 2 வழக்குரைஞா்கள் மீது சிபிசிஐடி போலீஸாா் கடந்த 21-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனா். இதனால் விரைவில் அவா்கள் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. இதற்கிடையே உயா்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறுவதற்கான முயற்சிகளில் அவா்கள் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.