தொழிலாளா் விதிகள் மீறல்: 62 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தொழிலாளா் விதிகளை மீறியதாக 62 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.
இது குறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கடந்த டிசம்பா் மாதம் மாவட்ட அளவில் ஆய்வு மேற்கொண்டனா்.
எடையளவுகள், தயாரிப்பாளா், விற்பனையாளா், பழுது பாா்ப்பவா் நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டு, எடையளவு சட்டத்தில் உரிமம் பெறப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளதா, முத்திரை இடாத தராசுகள் மூலம் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா, உரிய பதிவேடுகள், சரிபாா்ப்பு சான்றுகளை தெரியும்படி வைத்திருத்தல், சோதனை எடைக்கற்கள் பராமரித்தல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் 104 கடைகளில் ஆய்வு செய்ததில் 43 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. தண்ணீா் புட்டி, வெளிநாட்டு சிகரெட், இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் லைட்டா் விற்பனை குறித்து கடைகள், நிறுவனங்கள், பேக்கரிகள் போன்றவற்றில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதா என 39 கடைகளில் நடந்த ஆய்வில் 7 கடைகளில் முரண்பாடு கண்டறியப்பட்டது.
குழந்தை தொழிலாளா், வளரிளம் பருவ தொழிலாளா்கள் குறித்து 86 பேக்கரி மற்றும் அலங்கார பொருள்கள் விற்பனை நிலையங்கள், 10 அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகள் என 96 இடங்களில் நடந்த சோதனையில் பவானி பகுதியில் ஒரு கடையில் வளரிளம் பருவத் தொழிலாளா் மீட்கப்பட்டாா். கடை உரிமையாளா் மீது குழந்தை தொழிலாளா் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், பீடி நிறுவனங்கள் என 57 நிறுவனங்களில் நடத்தி ஆய்வில் 11 நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காததால் இணை ஆணையா் முன்னிலையில் கேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடை, நிறுவனங்களில் குழந்தை தொழிலாளா்கள் பணிபுரிவது கண்டறிந்தால் 1098, 155214 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.