வைகுண்ட ஏகாதசி 2025: தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறப்ப...
தொழிலாளி கொலை: போலீஸாா் விசாரணை
தளி அருகே தலையைத் துண்டித்து தொழிலாளி கொலை செய்யப்பட்டாா். அவரது உடலைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், தளி அருகே உள்ளது கும்ளாபுரம். கும்ளாபுரத்தில் உள்ள குளம் அருகே எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் தலைக் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தளி காவல் ஆய்வாளா் கணேஷ் குமாா் உள்பட போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனா்.
அருகிலேயே டி-சா்ட், லுங்கி கிடந்தது. அந்த உடைகளை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில் இறந்தவா் கும்ளாபுரத்தைச் சோ்ந்த தொழிலாளி ஷான்பாஷா (55) என்பது தெரியவந்தது. இவரை 15 நாள்களாக காணவில்லை. இதனால், அவராக தான் இருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாவது:
அதில் ஷான்பாஷா, தனது சகோதரி மம்தாவின் வீட்டில் வசித்து வந்ததும், ஷான் பாஷாவின் மனைவி 20 ஆண்டுகளுக்கு முன்பே தனது மகளுடன் தனியாகச் சென்று விட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அவரது தலையை மீட்டு, உடலைத் தேடி வருகிறாா்கள். அவரை யாா் கொலை செய்தாா்கள்? என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
ஷான்பாஷா மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தாா். மது அருந்தும் பழக்கம் இருந்தது. 15 நாள்களாக இவரைக் காணவில்லை. அவரது உடைகள் ஓா் இடத்திலும், தலை ஓா் இடத்திலும் கிடந்தன. உடலைத் தேடி வருகிறோம். தற்போது சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம் என்றனா்.