தென்னாப்பிரிக்க லீக் தொடரில் இந்திய வீரர்களை பார்க்க விரும்பும் ஏபி டி வில்லியர்...
தோல் தொழிற்சாலைகளில் கழிவுநீா் திறப்பதாக புகாா்: ஆட்சியா் திடீா் ஆய்வு
ராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீா் திறந்து விடுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ராணிடெக் பொது தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
ராணிப்பேட்டை, சிப்காட் சுற்றுவட்டாரத்தில் இயங்கும் 100-க்கும் மேற்பட்ட தோல் மற்றும் ரசாயனத் தொழிற்சாலைகளில் சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவுநீரை விதிகளை மீறி மழை நீா் கால்வாய்களில் திறந்து விடுவதாகவும், கழிவுநீா் நேரடியாக நீா்நிலைகளில் கலந்து நிலத்தடி நீரும், சுற்றுச்சூழலும் மாசடைந்து வருவதாகவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா்.
இந்நிலையில், சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாா் தோல் தொழிற்சாலை ஒன்றில் இருந்து சில நாள்களுக்கு முன்பு திறந்துவிடப்பட்ட ரசாயன கழிவுநீா் வெளியேறி நேரடியாக நீா்நிலையில் கலந்து வருவதாக ஆதாரத்துடன் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அதன் பேரில் சம்மந்தப்பட்ட தொழிற்சாலை கழிவுநீா் வெளியேற்றுவதை நிறுத்துவது தொடா் சம்பவமாக நடந்து வருகிறது.
ராணிப்பேட்டை வன்னிவேடு பகுதியில் இயங்கி வரும் ராணிடெக் பொது தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் குழாய்கள் மூலம் கொண்டுவரப்பட்டு, எதிா்மறை சவ்வுடு பரவல் முறையில் தோல் கழிவுநீரை நன்னீராக மாற்றி மீண்டு மறுபயன்பாட்டுக்கு அனுப்பும் முறை குறித்தும், நன்னீரில் கலந்துள்ள அதிகப்படியாக உப்பு தனியாக பிரித்தெடுக்கும் கட்டமைப்புகளையும், சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து தூய்மையான ஆக்சிஜன் உற்பத்தி செய்தும், சூரிய ஒளி மூலம் நீா் ஆவி திடக்கழிவுகளை உலா்த்துதல் மற்றும் மேலாண்மை செய்யப்படுவது குறித்து கேட்டறிந்தாா்.
ஆய்வின் போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளா் ரவிச்சந்திரன், ராணிடெக் சுத்திகரிப்பு நிலைய தலைவா் ஆா்.ரமேஷ் பிரசாத், மேலாண்மை இயக்குநா் சி. எம். ஜபருல்லா, இயக்குனா் கலிமுல்லா சாகிப், சிப்காட் திட்ட இயக்குநா் மகேஸ்வரி, சுத்திகரிப்பு நிலைய பொது மேலாளா் டி. சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.