செய்திகள் :

தோஷங்கள் போக்கி ஆனந்தம் அளிக்கும் அனந்தீசுவரர்!

post image

கத்ருவுக்கு இருந்த ஆயிரம் நாகக் குழந்தைகளில், எட்டு முக்கியமான நாகங்கள் அஷ்ட நாகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை வாசுகி, ஆதிசேஷன், கார்க்கோடகன், அனந்தன், குளிகன், தட்சகன், சங்கபாலன், பதுமன் ஆகியவையாகும். அவை இறைவனை வழிபட்டு நாகலோகத்தில் சிரஞ்சீவியாக வாழும் பேற்றைப் பெற்றுள்ளன என்கிறது வரலாறு.

பக்தர்களுக்கும் மக்களுக்கும் உதவுவதற்காக இறைவனை வேண்டி வழிபட்டு நாகங்களுக்கு இறைவன் காட்சி தந்து உள்ளார். அவை பலனளிக்கக் கோயில்களிலும், மரத்தடியிலும் கருவறையிலும் தனி சிலா வடிவங்களாக வழிபடப்படுகின்றன. அனந்தன் மகளான சந்திரரேகையை தேவாங்கன் எனும் தேவ முனிவருக்கு மணம் செய்து வைக்கும் அளவிற்கு நெருக்கமுடையவையாகும். முன்பு தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தபோது உண்டான அமிர்தத்துளி ஒன்று தெரித்து விழும்போது இரண்டாகச் சிதற ஒன்று வடக்கில் இமயமலையில் விழுந்து பதரி வனமாயிற்று. மற்றொரு துளி தமிழகத்தில் விழுந்து இலந்தை வனமாகி “தென் பத்ரிகாரண்யம்” என பெயர் பெற்றது.

ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அசுர்களை அழித்ததனால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க ஈசனிடம் பரிகாரம் கேட்டார். இறைவன், “பூவுலகில் தட்சிண பதரி ஆரண்யமான கீழ்வேளூரில் சுயம்புலிங்கமாய் எழுந்தருளி அருள்பாலிக்கும் தன்னைச் சுற்றிலும் நவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடக் கூறினார் .அதன்படி ஒன்பது ஊர்களில் நவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பலன் பெற்றார். அந்த இறைவன் கேடுகளைக் களையும் கேடிலீஸ்வரர் என்ற பெயரோடு கிழக்கு நோக்கிய சன்னதியில் சிவலிங்க வடிவில் அருளுகிறார்.

ஒரு நேரம் வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் யார் வலி மிக்கவரென நடந்த சாதாரண பேச்சு தடித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் மிகுந்து கடும் போட்டியாக மாறியது. ஆதிசேஷன் தன் வலிமை கொண்டு மேருமலையை தன் வாலால் இறுக்கிப் பிடித்துக்கொண்டார். வாயுதேவன் தன் சக்தியெல்லாம் திரட்டி வாயுவாக வீசியடித்தும் முயன்றும் அசைக்க முடியவில்லை. வாயுபகவான் இங்கிருக்கும் இறைவனை வணங்கி அதிகபலம் பெற்று வந்து மேருவை அசைத்தார். வாயுவின் பலம் மற்றும் ஆதிசேஷனின் செருக்கு காரணமாக பலம் குறைந்த சிகரத்தின் ஒருபகுதி துண்டாகி தமிழக பத்ரி வனத்தில் வந்து விழுந்தது ஆதிசேஷன் வலி குன்றிப் போனான்.

அநந்தன் இதைக்கண்டு வருந்தி தன் சகோதரன் பிழையால் நடந்ததைக் கேட்டு வருந்தி மேருவின் சிகரம் வந்து விழுந்த இந்த தலத்திற்கு வந்து குடிகொண்டிருக்கும் சிவபெருமானின் பேரொளியைக் கண்டு மெய்சிலிர்த்தார். வலுவிழந்திருக்கும் தன் சகோதரனுக்காக பயபக்தியுடன் சிவனை வணங்கி பதரி வனத்தின் மேல் பாகத்தில் ஒரு தடாகம் தன் பெயரால் உண்டாக்கினார். அங்கு நர்மதா தீர்த்தத்திலிருந்து கொண்டு வந்த பானலிங்கத்தை தடாகத்தின் மேல் கரையில் நிறுவினார். இறைவனைப் பூசித்து முடிக்க இறைவன் வேண்டும் வரம் கேட்கக் கூறினார். இறைவன் தனக்கு அருள் செய்ய, தன் சகோதரன் முழு பலமடைய வேண்டுமெனக் கேட்டார். அப்போது வரமளிக்கும்போது ஈசன் இத்தலத்தில் எம்மை வந்து வழிபடும் அடியவர்களுக்கெல்லாம் நாக தோஷம், களத்திர தோஷம், ராகு-கேது தோஷம், காலசர்ப்பதோஷம், புத்திர தோஷம் ஆகியவை விலக்க வேண்டுமெனக் கூறினார். அதனை ஒப்புக்கொண்ட அனந்தனும் ஆதிசேஷனுக்கும் பிரதி பலன் அளித்தார். தன் சகோதரன் ஆதிசேஷன் பலத்தை முன்னிலும் பன்மடங்கு பெற்று அளித்து அகங்காரம் இல்லாது சாந்த சொரூபியாக வணங்கி அங்கேயே குடி கொண்டான் எனவும் அதனால் இப்பகுதி சேஷபுரியெனவும் அழைக்கப்படுகிறது என்கிறது வரலாறு.

அனந்தன் நிறுவிய அந்த லிங்கம் அவர் பெயராலேயே அனந்தேஸ்வரர் என்றும் சேஷபுரீஸ்வரர் என்றும் பெயரிட்டு வணங்கினார் .பக்தர்களும் அதனையே பின்பற்றினர். அவ்வாறு செல்லும் முன் இவ்விடத்தில் கேடிலியப்பர் இருந்தாலும் பலம் யோகம் ,ஞானம், ஆகியவை மக்கள் எளிதில் பெறுவதற்காக தனித்து இங்கேயே நிலைத்து நின்று அருள வேண்டும் எனக்கேட்டு ”சென்னிமிசை கரம் கூப்பி தெய்வ சிகாமணி போற்றி! இன் அருளால் எமை பொறுக்க எழுந்தருளச் செயல் போற்றி!!” என வேண்டி தனித்துவம் மிக்க பரிகாரத்தலமாக உருவாக்கிச் சென்றதோடு மட்டுமில்லாமல் சூட்சும சரீரத்துடன் அமாவாசை பௌர்ணமி வெள்ளி ஞாயிறு நாட்களில் ஆதிசேஷனும் அனந்தனும் வந்து பூசை செய்து வழிபட்டுச் செல்லும் தலமாகவும் விளங்குகிறது.

கீவளூர் அனந்தீஸ்வரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டம், கீவளூர் வட்டம், கீவளூரில் கேடிலியப்பர் கோயிலின் மேற்கு கோபுர வாயிலுக்கு நேர் மேற்கே. கிழக்கு நோக்கிய பெரிய குளத்தின் மேற்குக் கரையில் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது எனப்படுகிறது இங்கு இறைவன் அழகிய லிங்கமூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். இறைவி அன்னை அபிராமி நின்றவாறு தெற்கு நோக்கிய கருவறையில் உள்ளார் அம்பிகைக்கு எதிரில் முருகனின் வடக்கு நோக்கிய சன்னதி உள்ளது. இறைவனின் முன் நந்தி, பலிபீடம் மற்றும் கோஷ்டத்தில் தென்முகன், துர்க்கை எழுந்தருளியுள்ளனர்.

அதேபோல் அம்பிகை சன்னதியை ஒட்டி நவக்கிரக, பைரவர் சிலைகளுடன் மகாலட்சுமி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது. தென்முகனின் நேர் எதிரில் அனந்தனால் மீண்டும் இழந்த சக்தியைப் பெற்ற ஆதிசேஷன் உள்ளார். தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், அசுரர்கள் ஆகியோரால் வணங்கப்பட்ட பிற தலங்களைப் போல, நாகர்கள் பூமியிலிருந்து பல கோவில்களில் சிவனை வழிபட வந்துள்ளனர். அதுபோல இங்கும் நாகர்கள் அவர்களின் உலகிலிருந்து பிலத்தின் வழியாக இங்கு வந்து இறைவனை வழிபட்டு அருள்பெற்றுச் செல்லுகின்றன.

திங்கள் கிழமைகளில் அனந்தீஸ்வரரையும், ஞாயிறு செவ்வாய் வெள்ளி ராகுகால வேளைகளில் துர்க்கையையும் செவ்வாய் வெள்ளிகளில் அன்னை அபிராமியையும் வழிபடுவதும் பலன் கிடைக்கச் சிறப்பான நாட்களில் மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பிரதோஷ நேரங்களில் சிவபெருமானை வழிபட்டு பலனடைகிறார்கள் சதுர்த்திகளில் ஆதிவினாயகரை வழிபட்டு பலன் அடைகின்றனர். பலமிழந்த ஆதிசேஷன் அனந்தனால் மறுவாழ்வு பெற்ற தலமாதலால் ராகு கேது ஒரே திருமேனியாக எழுந்தருளியிருப்பதால் சகல நாக தோசம் பாதிக்கப்பட்டவர்கள் பரிகார ஓமம் விளக்கிடுதல் வழிபாடு ஆகியவற்றை மேற்கொள்கின்றனர்.

பழமைமிகு இத்திருக்கோயில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு முழு அளவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு செப்பம் செய்யப்பட்டு ஜனவரி 17ம் தேதி யாக சாலைகள் துவங்கி 4 காலங்கள் நடந்து 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தரிசித்து பலன் பெறுவீர்.

உதவி ஆணையர் (ஓய்வு) அறநிலையத்துறை

வைரத்தை யார் அணிய வேண்டும்? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

வைரத்தை ஆபரணமாக அணிவது வேறு, அதை ஜோதிட ரீதியாக ரத்தினமாக அணிவது வேறு. ரத்தினத்தின் விளைவை அதிகரிக்க அதை அணிவதற்கு முன்பு ஒரு ஜோதிடரை அணுகி ஆற்றல் பெற வேண்டும்.ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். நாம... மேலும் பார்க்க