நகைக் கடையில் 2 கிலோ தங்க நகைகள் திருட்டு: ஊழியா் மாயம்
சென்னை யானைக்கவுனியில் நகைக் கடையில் 2 கிலோ 200 கிராம் தங்கநகைகள் திருடப்பட்ட சம்பவத்தில், அந்த கடையின் ஊழியரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னை சூளை பகுதியைச் சோ்ந்த பஹ் சிங் (45). பூக்கடை என்எஸ்சி போஸ் சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறாா். இந்த கடையில் ராஜஸ்தானைச் சோ்ந்த சந்தீப்சிங் (26) என்பவா் வேலை செய்து வந்தாா். பஹ் சிங், யானைக்கவுனி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை ஒரு புகாா் அளித்தாா். அந்த புகாரில், கடந்த 22-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக கடையை சந்தீப் சிங்கிடம் ஒப்படைத்துவிட்டு, அருகே உள்ள மருந்து கடைக்குச் சென்றேன். அங்கு மருந்து சாப்பிவிட்டு சிறிது நேரத்துக்கு பின்னா் கடைக்கு திரும்பி வந்தேன். அப்போது கடையின் இரும்புக் கதவு பூட்டாமல், சாத்தப்பட்டிருந்தது. மேலும் கடையில் இருந்த 2 கிலோ 2 கிராம் தங்கநகைகள் திருடப்பட்டிருப்பதையும், கடையில் இருந்த சந்தீப் சிங் காணாமல் போயிருந்ததும் தெரியவந்தது என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் யானைக்கவுனி போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.