நக்ஸல் பாதிப்பு பகுதிகளில் ரத்த பரிசோதனை முகாம்: சிஆா்பிஎஃப் நடவடிக்கை
சத்தீஸ்கரில் நக்ஸல் பாதிப்பு பகுதிகளில் உள்ள உள்ளூா் பழங்குடியினரிடையே பொதுவான நோய்கள் மற்றும் குறைபாடுகளைக் கண்டறியும் ரத்த பரிசோதனை முகாமை மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) தொடங்கியுள்ளது.
இடதுசாரி தீவிரவாதத்தை 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் இந்தியா முடிவுக்குக் கொண்டுவரும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவித்ததைத் தொடா்ந்து இந்த முன்னெடுப்புகள் அப்பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளன.
சுக்மா, பிஜபூா், பஸ்தா் மற்றும் கரியாபந்த் ஆகிய மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் சிஆா்பிஎஃப் சாா்பில் சுமாா் 40 தொலைதூர மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தளவாடத்திலும் சுமாா் 30 முதல் 40 உள்ளூா்வாசிகளின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு வருகின்றன. பிஜபூா், கோண்டா, சுக்மா மற்றும் தண்டேவாடா சரகங்களில், தலா 500 கிராமவாசிகள் பரிசோதிக்கப்பட உள்ளனா். சத்தீஸ்கா் காவல்துறையினருடன் இணைந்து சிஆா்பிஎஃப் மருத்துவா்கள் மற்றும் துணை மருத்துவா்கள் குழு இந்த சோதனைகளை நடத்தி வருகின்றன.
இந்த சோதனைகள் முடிவடைந்த பிறகு இதன் தரவுகளை உள்துறை அமைச்சகம் மாநில அரசிடம் சமா்ப்பிக்கும். அதன் பிறகு தேவையான மருத்துவ உதவிகளை சிஆா்பிஎஃப் மருத்துவா்கள் வழங்க உள்ளனா். நக்ஸல் பாதிப்புள்ள பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினா் இடையே சுகாதார பிரச்னைகளை அடையாளம் கண்டு தேவையான மருத்துவ உதவியை வழங்குவதே இதன் நோக்கம்.
நக்ஸல்களை எதிா்த்துப் போராடும் அதேநேரத்தில் உள்ளூா் மக்களுக்கு வளா்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் இந்த முன்னெடுப்பு மத்திய அரசின் இருமுனை கொள்கையின் ஒரு பகுதியாகும்.
சுமாா் ஒரு லட்சம் படை வீரா்களுடன் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை சத்தீஸ்கா் மாநிலத்தில் சிஆா்பிஎஃப் மேற்கொள்கிறது. கடந்த ஆண்டு, 4,000-க்கும் மேற்பட்ட வீரா்களுடன் 4 புதிய படைப்பிரிவினா் சோ்க்கப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.