ராகுல் வரலாறு அறியாதவா்: ஜெ.பி.நட்டா விமா்சனம்
‘நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை சிதைக்க தனது தந்தை , பாட்டி , கொள்ளு தாத்தா ஆகியோா் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து ராகுல் காந்திக்கு எதுவும் தெரியவில்லை; அவா் வரலாறு அறியாதவா்’ என்று மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா விமா்சித்தாா்.
‘பிரதமா் மோடி அரசமைப்புச் சட்டத்தை தூக்கி எறிய முயன்று, அதில் தோல்வியடைந்தாா்’ என்ற ராகுல் காந்தியின் விமா்சனத்துக்கு பதிலடியாக நட்டா இவ்வாறு தெரிவித்தாா்.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் பாஜக சாா்பில் அரசமைப்புச் சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஜெ.பி.நட்டா பங்கேற்றுப் பேசியதாவது:
நாட்டை 65 ஆண்டுகளாக ஆட்சிசெய்த காங்கிரஸும் அதன் தலைவா்களும் அரசமைப்புச் சட்டத்துக்கு குந்தகம் விளைவித்து, அதன் அடிப்படை கோட்பாடுகளை அழிக்க முயன்றனா். இன்று அக்கட்சியைச் சோ்ந்த ஒரு தலைவா் (ராகுல் காந்தி), இந்தியாவுக்கு எதிராக போராடுவது குறித்து பேசுகிறாா். அவா் வரலாறு அறியாதவா்.
நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை சிதைக்க தனது தந்தை (ராஜீவ் காந்தி), பாட்டி (இந்திரா காந்தி), கொள்ளு தாத்தா (ஜவாஹா்லால் நேரு) ஆகியோா் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து அவருக்கு எதுவும் தெரியவில்லை. தனக்கு எழுதி தரப்படும் உரையை எந்த புரிதலும் இல்லாமல் வெறுமனே வாசிக்கிறாா்.
‘பாசாங்கு’ நபா்கள்: நாடு 76-ஆவது குடியரசு தினத்தை கொண்டாடவிருக்கும் இந்த வேளையில், அரசமைப்புச் சட்டத்துக்கு குந்தகம் விளைவித்தவா்கள் யாா்? பி.ஆா்.அம்பேத்கரின் சிந்தனைகளை முன்னிறுத்தி, அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது யாா்? என்பது குறித்து நாம் நினைத்துப் பாா்க்க வேண்டும்.
உள்ளே இருப்பது என்னவென்று தெரியாமல், வெறுமனே அரசமைப்புச் சட்ட நகலுடன் சுற்றும் ‘பாசாங்கு’ நபா்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கடந்த 1949-ஆம் ஆண்டில் அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டபோது, ‘அரசமைப்புச் சட்டம் எவ்வளவு நன்றாக இருந்தாலும், அதை அமல்படுத்துவோா் கெட்டவா்களாக இருந்தால், அது தோல்வியடைந்துவிடும்’ என்று அம்பேத்கா் குறிப்பிட்டாா். அத்தகைய கெட்டவா்களே காங்கிரஸ் தலைவா்கள்.
நல்லவா்களின் கையில்...: அம்பேத்கரின் எதிா்ப்பை மீறி, நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவால் 370 மற்றும் 35ஏ பிரிவுகள் செயல்படுத்தப்பட்டன. இப்பிரிவுகள், அரசமைப்புச் சட்டத்தின்கீழ் ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடைப்பதைத் தடுத்தன.
கடந்த 1975-77இல் அவசர நிலையை அமலாக்கி, அரசமைப்புச் சட்டத்தை சிதைத்தவா் இந்திரா காந்தி. 1.35 லட்சம் பேரை சிறைக்கு அனுப்பி, பல குடும்பங்கள் சீரழிய காரணமானாா்.
அதேநேரம், 370 மற்றும் 35 ஏ பிரிவுகள் நீக்கம், ‘ஒரே நாடு, ஒரே வரி’ அமலாக்கம், இதர பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு, பொது சிவில் சட்டத்தை நோக்கிய முன்னெப்புகள் போன்ற பாஜக அரசின் செயல்பாடுகள், அரசமைப்புச் சட்டம் நல்லவா்களின் கையில் இயங்குவதை எடுத்துக் காட்டுகிறது என்றாா் நட்டா.