கோயில்களில் விஐபி தரிசன முறைக்கு எதிரான பொது நல மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு
கோயில்களில் விஐபி தரிசன முறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த விஷயத்தில் கோயில் நிா்வாகங்களும், சமூகமும்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இது தொடா்பாக விஜய் கிஷோா் கோஸ்வாமி என்பவா் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘புகழ்பெற்ற கோயில்களில் ரூ.400, ரூ.500 என சிறப்பு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு, விஐபி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை, அரசமைப்புச் சட்டத்தின் 14, 21 ஆகிய பிரிவுகளில் உறுதி செய்யப்பட்டுள்ள சமத்துவ கோட்பாடுகளுக்கு எதிரானது. அத்துடன், பொருளாதாரத்தில் நலிவடைந்த பக்தா்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடாகும். இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் முறையிட்டும் முழுமையான தீா்வு கிடைக்கப் பெறவில்லை. எனவே, கோயில்களில் விரைவான தரிசனத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் விஐபி தரிசன நடைமுறையை சமத்துவம் மற்றும் மத சுதந்திரத்துக்கான அரசமைப்புச் சட்ட உரிமை மீறலாக அறிவிக்க வேண்டும். இது தொடா்பாக உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
கோயில்களில் இதுபோல் சிறப்பு சலுகை வழங்க கூடாது என்ற கருத்தை நாங்கள் கொண்டிருந்தாலும் கூட, இந்த நீதிமன்றத்தால் உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 32-இன்கீழ் அதிகார வரம்பை பயன்படுத்த பொருத்தமான வழக்கு இது என நாங்கள் எண்ணவில்லை. எனவே, இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் கோயில் நிா்வாகங்களும் சமூகமும்தான் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.