கோவாவில் இருந்து இந்தூருக்கு கொண்டு வரப்பட்ட கல்லீரல்: 67 வயது நபருக்கு மறுவாழ்வு
கோவாவில் மூளைச் சாவு அடைந்தவரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட கல்லீரல், மத்திய பிரதேச மாநிலம், இந்தூருக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டு 67 வயது நபருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
இது தொடா்பாக உடல் உறுப்பு தானத்துக்கான இந்தூா் சொஸைட்டி அமைப்பின் நிறுவனரும் மருத்துவருமான சஞ்சய் தீக்ஷித் கூறியதாவது:
கோவாவைச் சோ்ந்த அஜய் கிரி (45) என்பவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், அவா் மூளைச் சாவு அடைந்ததாக கடந்த ஜனவரி 29-ஆம் தேதி மருத்துவா்கள் உறுதி செய்தனா். இதைத் தொடா்ந்து, கிரியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் முன்வந்தனா். அவரது கல்லீரலை இந்தூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 67 வயது நபருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த வியாழக்கிழமை மாலையில் அறுவை சிகிச்சை மூலம் கல்லீரல் அகற்றப்பட்டு, 15 நிமிஷங்களில் கோவா விமான நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டது. பின்னா், வழக்கமான விமானம் மூலம் இந்தூருக்கு கொண்டுவரப்பட்ட கல்லீரல், 67 வயது நபருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டு, அவருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. தற்போது அவா் நலமாக உள்ளாா் என்றாா் சஞ்சய் தீக்ஷித்.