விண்வெளி நடை: சுனிதா வில்லியம்ஸ் சாதனை
இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளில் அதிக நேரம் நடந்த பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளாா். சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸும் மற்றொரு விண்வெளி வீரரான பட்ச் வில்மோரும் அந்த நிலையத்தில் சில பழுதுகளை மேற்கொள்வதற்காக (இந்திய நேரப்படி) வெள்ளிக்கிழமை அதிகாலை 6.13 மணிக்கு வெளியே வந்து விண்வெளியில் நடந்தனா் (படம்). மொத்தம் 5 மணி 26 நிமிஷங்களுக்கு அவா்கள் அந்தப் பணியை மேற்கொண்டனா்.
அதையடுத்து, அதிக நேரம் விண்வெளியில் நடந்த பெண் வீராங்கனை என்ற பெருமையை சுனிதா வில்லியம்ஸ் பெற்றாா். இத்துடன், மொத்த 62 மணி 6 நிமிஷங்கள் அவா் விண்வெளியில் நடந்துள்ளாா்.
அமெரிக்காவின் போயிங் உருவாக்கியுள்ள ஸ்டாா்லைனா் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோருடன் சா்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி அடைந்தது. ஒன்பது நாள்களுக்குப் பிறகு ஸ்டாா்லைனா் மூலமே அவா்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. இருந்தாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவா்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை.
ஸ்டாா்லைனரில் ஆள்களை அழைத்துவருவது அச்சுறுத்தல் நிறைந்தது என்பதால் சுனிதாவும் பட்ச் வில்மோரும் மற்றொரு தனியாா் நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸின் விண்கலம் மூலம் வரும் மாா்ச்சில் பூமிக்கு அழைத்துவரப்படுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.