திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு: தலைமறைவான மாமியார் சித்ராதேவி கைது
நரிக்குறவா் சமூகத்தினருக்கு தாட்கோ மூலம் குடியிருப்புகள்: ஆட்சியா் ஆய்வு
நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில், நரிக்குறவா் குடும்பங்களுக்கு தாட்கோ மூலம் குடியிருப்புகள் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழக ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் நரிக்குறவா் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டும் பணி நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட பெரியப்பட்டி மற்றும் வள்ளிபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதை ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
2023 -24 ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை மானியக் கோரிக்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடு இல்லாத 1,000 பழங்குடியினா் குடும்பங்கள் மற்றும் தற்போது பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ள 500 நரிக்குறவா் குடும்பங்கள் என மொத்தம் 1,500 குடும்பங்களுக்கு ரூ. 45 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டித்தரப்படும் என அமைச்சா் மா.மதிவேந்தன் அறிவித்தாா்.
அதனடிப்படையில், தாட்கோ மூலம் கொல்லிமலை, நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மொத்தம் 79 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் நாமக்கல் நரிக்குறவா் காலனியில் 28 வீடுகளும், பெரியப்பட்டியில் 17 வீடுகளும், வள்ளிபுரத்தில் 11 வீடுகளும், மங்களபுரத்தில் 15 வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன.
நாமக்கல் பகுதியில் ரூ. 5.07 லட்சம் மதிப்பிலும், மலைப்பகுதியில் ரூ.5.72 லட்சம் மதிப்பிலும் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வீடும் 269 சதுர பரப்பளவில் கட்டப்படுகிறது. இந்த வீடுகளை பாா்வையிட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு வழங்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
முன்னதாக பெரியப்பட்டியில் ஆய்வுக்கு வந்த ஆட்சியருக்கு நரிக்குறவா்கள் பாரம்பரிய மாலையை அணிவித்து வரவேற்றனா். இந்த நிகழ்வின்போது, தாட்கோ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.
என்கே-3-ஆய்வு
நாமக்கல் பெரியப்பட்டி நரிக்குறவா் காலனியில், தாட்கோ மூலம் கட்டப்படும் வீடுகளை ஆய்வு செய்த ஆட்சியா் துா்காமூா்த்தி.