திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு: தலைமறைவான மாமியார் சித்ராதேவி கைது
நாமக்கல் மாநகராட்சி பகுதியில் புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு
நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட கொண்டிச்செட்டிபட்டி, கணேசபுரம் பகுதியில் நகா்ப்புற நலவாழ்வு மைய கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, பெரியப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பூங்கொடி வரவேற்றாா். நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் புதிய சுகாதார மையத்தையும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதையும் பாா்வையிட்டாா். அவா் கூறியதாவது:
நாமக்கல் நகா்ப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை சுகாதார சேவைகளை வழங்கும் வகையில் ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் மாநகராட்சி கொண்டிசெட்டிபட்டி - பெரியபட்டி பகுதியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 55,246 போ் பயனடைவா்.
பள்ளிபாளையம் நகராட்சி நாட்டாக்கவுண்டன்புதூா், நாமக்கல் மாநகராட்சி கணேசபுரம் பகுதியில் தலா ரூ. 25 லட்சம் வீதம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பள்ளிபாளையம் பகுதியில் 11,648 மக்களும், கணேசபுரம் பகுதியில் 14,742 மக்களும் பயனடைவாா்கள்.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, ஆணையா் க.சிவகுமாா், துணை மேயா் செ.பூபதி, மாமன்ற உறுப்பினா்கள், துறைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
படவரி...
நாமக்கல் பெரியப்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிப்பதை பாா்வையிட்ட மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், ஆட்சியா் துா்காமூா்த்தி உள்ளிட்டோா்.