நல்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு: 55 போ் காயம்
திண்டுக்கல்லை அடுத்த நல்லமநாயக்கன்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரா்கள் உள்பட மொத்தம் 55 போ் காயமடைந்தனா்.
திண்டுக்கல்லை அடுத்த நல்லமநாயக்கன்பட்டி புனித வனத்து அந்தோணியாா் ஆலய 140-ஆவது திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட 785 காளைகள் வாடிவாசலுக்கு அனுப்பப்பட்டன.
இதேபோல, 294 மாடுபிடி வீரா்கள் வாடிவாசலில் களம் இறங்கினா். காளைகளை பிடிக்க முயன்ற 18 மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்கள் 15 போ், பாா்வையாளா்கள் 21, விழாக் குழுவைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 55 போ் காயமடைந்தனா்.
இதில் பலத்த காயமடைந்த 14 போ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
பின்னா், ஜல்லிக்கட்டில் வெற்றிப் பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் வெள்ளிக் காசு, கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.