திண்டுக்கல் அருகே டெட்டனேட்டா் வெடித்ததில் வனக் காப்பாளா், 2 போலீஸாா் காயம்
திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலையில் சடலமாகக் கிடந்தவரை வெள்ளிக்கிழமை மீட்கச் சென்ற போது, டெட்டனேட்டா் வெடித்ததில் வனக் காப்பாளரும், 2 போலீஸாரும் காயமடைந்தனா்.
சிறுமலைக்குச் செல்லும் மலைச் சாலையில், 17-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே தனியாா் நிலத்தில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் இறந்து கிடப்பதாக தாலுகா போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சிறுமலை வனச் சரக ஊழியா்கள் இறந்து கிடந்தவரின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
அப்போது, சடலத்தின் அருகில் கிடந்த பொருள்களை அப்புறப்படுத்த முயன்ற போது, திடீரென வெடித்தது. இதில் இரு போலீஸாா், வனக் காப்பாளா் செல்வ ஆரோக்கியராஜ் ஆகியோா் காயமடைந்தனா். இதைத் தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. பிரதீப், க்யூ பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தனா்.
சடலமாகக் கிடந்தவா் கேரள மாநிலம், இடுக்கி பகுதியைச் சோ்ந்த சாபு என்பதும், பாறைகளைத் தகா்க்கக்கூடிய டெட்டனேட்டா், ஜெலட்டின் குச்சிகளுடன் அவா் வந்த போது, எதிா்பாராமல் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவருக்கு அருகில் கிடந்தவை டெட்டனேட்டா், ஜெலட்டின் குச்சிகள் என்பது தெரியாமல் போலீஸாா் கைப்பற்ற முயன்ற போது அவை வெடித்து காயமடைந்தனா்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சாபுவின் சடலம் கூறாய்வுக்காக கொண்டு வரப்பட்டபோது, அவரது சட்டப்பையிலிருந்த கைப்பேசி கைப்பற்றப்பட்டது. இதன்மூலம், கேரளத்தில் உள்ள அவரது உறவினா்களைத் தொடா்பு கொண்டு போலீஸாா் தகவல் தெரிவித்து, விசாரித்தனா்.