உசிலம்பட்டி: ஒச்சாண்டம்மன் கோயிலில் வெகு விமரிசையாக நடந்த மாசிப் பெட்டி எடுப்பு ...
மக்காச்சோளத்துக்கு விவசாயிகளிடம் சந்தைக் கட்டணம் வசூல்: குறைதீா்க் கூட்டத்தில் புகாா்
மக்காச்சோளத்துக்கு விவசாயிகளிடம் சந்தைக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறைதீா்க் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா்க் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். வேளாண்மை இணை இயக்குநா் அ.பாண்டியன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
தாதன்குளத்தை ஆழப்படுத்த வலியுறுத்தல்: திண்டுக்கல்லை அடுத்த குட்டத்துப்பட்டி தாதன்குளத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், மேற்கொள்ளப்படும் பணிகளால் பயன் கிடைக்காது. இதனால், இயந்திரங்கள் மூலம் தூா்வாரி, மதகுகள் கட்டிக் கொடுத்தால், மீண்டும் விவசாயப் பணிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என விவசாயிகள் சங்க நிா்வாகி நாகராஜன் தெரிவித்தாா்.
ஆட்சியா்: ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
காட்டு மாடுகளால் பயிா்கள் சேதம்: தொப்பையசாமி மலை அடிவாரத்தில், ஆா்.கோம்பை சுற்றுப் புறப் பகுதிகளில் காட்டு மாடுகளால் விவசாயப் பயிா்கள் சேதமடைந்து வருகின்றன. காட்டு மாடுகளுக்கான குடிநீா் வசதியை, மலையடிவாரத்தில் ஏற்படுத்திக் கொடுத்தால், இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண முடியும் என விவசாயி எஸ்.முத்துச்சாமி கோரிக்கை விடுத்தாா்.
ஆட்சியா்: மலையடிவாரத்திலுள்ள வருவாய்த் துறை நிலங்களில், வனத் துறை மூலம் விலங்குகளின் குடிநீா்த் தேவைக்காக தண்ணீா்த் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
100 குளங்களுக்கு காவிரி நீா்: காவிரியிலிருந்து, குஜிலியம்பாறை, வேடசந்தூா், வடமதுரை ஆகிய வட்டாரங்களிலுள்ள 100 குளங்களுக்குத் தண்ணீா் நிரப்பும் திட்டம், நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. வானம் பாா்த்த பூமியை வளப்படுத்தும் வகையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயச் சங்கத் தலைவா் எஸ்.வீரப்பன் தெரிவித்தாா்.
ஆட்சியா்: இதுதொடா்பான பரிந்துரைகள், இதன் தற்போதைய நிலை குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
குத்தகை விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை: விவசாயிகளுக்குத் தனித்துவமான அடையாள அட்டை வழங்குவதற்கானப் பதிவு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் குத்தகை விவசாயிகளின் விவரங்களை பதிவு செய்ய முடியவில்லை. நிலக்கோட்டை பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் எலிகளை கட்டுப்படுத்துவதற்கான பசை மருந்து கிடைப்பதில்லை என விவசாயச் சங்க நிா்வாகி ராஜேந்திரன் தெரிவித்தாா்.
வேளாண்மை இணை இயக்குநா்: வருவாய்த் துறை ஆவணங்களின் அடிப்படையில், சொந்தமாக விவசாய நிலங்கள் வைத்திருப்போரின் விவரங்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. இதில் குத்தகை விவசாயிகளை பதிவு செய்ய முடியாது. எலிகளை கட்டுப்படுத்துவதற்கான பசை மருந்து தற்போது தடை செய்யப்பட்டுள்ளது, இதற்கான மாத்திரைகள் கிடைக்கின்றன. இதைப் பயன்படுத்தி எலிகளை கட்டுப்படுத்தலாம் என்றாா்.
விவசாயிகளிடம் சந்தைக் கட்டணம் வசூல்: மக்காச்சோளம் விற்பனை செய்யும் விவசாயிகளிடம் 1 சதவீத சந்தைக் கட்டணத்தை வியாபாரிகள் வசூலிக்கின்றனா். இடுப் பொருள்களின் விலை ஏற்றத்துக்கு நிகராக, மக்காச்சோளத்தின் விற்பனை விலை அதிகரிக்கவில்லை. இந்தச் சூழலில் சந்தைக் கட்டணம் வசூலிப்பதால் மேலும், நெருக்கடி ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ராமசாமி தெரிவித்தாா்.
வேளாண் விற்பனைக் குழுச் செயலா்: நெல், கடலை, தேங்காய், கொப்பரை உள்பட 8 பொருள்களுக்கு மட்டுமே சந்தைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மக்காச்சோளமும் அந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது என்றாா்.
கால்நடைக் கணக்கெடுப்பில் குளறுபடி: மாவட்டத்தில் நடைபெற்று வரும் கால்நடைக் கணக்கெடுப்பு முறையாக நடைபெறவில்லை. கால்நடை மருந்தகங்கள், மருத்துவமனைகளுக்கான ஒதுக்கீடு, இந்தக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்படுகின்றன. முறையான கணக்கெடுப்பு நடைபெறாத பட்சத்தில், எதிா்காலத்தில் கால்நடை மருந்தகங்களின் செயல்பாடு பாதிக்கப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் என்.பெருமாள் தெரிவித்தாா்.
கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் ராஜா: 8 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே கால்நடை மருத்துவமனைகள் அமைக்க முடியும். கால்நடை கணக்கெடுப்பை பொருத்தவரை, கிராம மக்களின் ஒத்துழைப்பு இல்லை. எனினும், கணக்கெடுப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குநா்கள் லீலாவதி, அமலா, காளிமுத்து, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் குருமூா்த்தி, தோட்டக்கலை துணை இயக்குநா் காயத்ரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பெட்டிச் செய்தி...தினமணி செய்தி எதிரொலி: கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய ஆட்சியா், தனி நபா் கோரிக்கைகளுக்காக மக்கள் குறைதீா் கூட்டம், மக்கள் தொடா்பு முகாம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் என பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. அதனால், விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், விவசாயம், விவசாயிகள் சாா்ந்த முக்கியமானப் பிரச்னைகளை மட்டும் பேசினால் தீா்வு காண்பதற்கு வாய்ப்பாக அமையும். கோரிக்கை மனுக்கள் கூட்டத்தின் நிறைவில் பெற்றுக் கொள்ளப்படும் என்றாா். இதே கருத்துக்களை வியாழக்கிழமை தினமணியில் வலியுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.