பேரணிக்கு சென்ற மாதா் சங்கத்தினா் காவல் துறையால் தடுத்து நிறுத்தம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
சென்னையில் நடைபெற்ற பேரணிக்கு செல்ல முயன்ற ஜனநாயக மாதா் சங்கத்தினரை காவல் துறையினா் தடுத்து நிறுத்திய செயலுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளா் ரா.சிசுபாலன்
வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமை தாக்குதலைக்
கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் பிப்.28-ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகம் நோக்கி கண்டனப் பேரணி நடைபெற்றது. இப் பேரணியில் பெரும் திரளாக பெண்கள் பங்கேற்பதை தடுக்கும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் காவல்துறையினா் பெண்களை அச்சுறுத்தியுள்ளனா்.
தருமபுரியிலிருந்து பேருந்து மூலம் சென்னை புறப்படுவதற்கு வருகை புரிந்த பெண்களை வழியிலேயே தடுத்து பேரணியில் பங்கேற்கக் கூடாது என்று காவல் துறையினா் மிரட்டி உள்ளனா். மாதா் சங்கத் தலைவா்களின் வீடுகளுக்கு வருகை புரிந்து நேரடியாகவும் தொலைபேசியிலும் அச்சுறுத்தி உள்ளனா். பேரணிக்கு செல்ல இயலாதவா்களை அவா்கள் வீட்டில் இருப்பது போல படம் எடுக்க முனைந்துள்ளனா். இத்தகைய காவல்துறையின் அத்துமீறல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஜனநாயக ரீதியில் ஊா்வலம் நடத்துவதை சீா்குலைக்கும் நோக்கில் காவல்துறை நடந்து கொண்டது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.
பெண்களின் ஜனநாயக உரிமைகளுக்காக தொடா்ந்து போராடி வருகிற அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் செயலை முடக்கும் நோக்கில் ஈடுபட்ட காவல்துறையினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
தருமபுரி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள், வெகுமக்கள் அமைப்புகள் நடத்துகின்ற ஊா்வலம், ஆா்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம் போன்றவற்றுக்கு காவல் துறையினா் அனுமதி மறுக்கும் போக்கு உள்ளது. இத்தகைய நடவடிக்கையை கைவிட்டு ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.