நாகா்கோவிலில் டிட்டோ ஜாக் போராட்டம்: 28 போ் கைது
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) சாா்பில், நாகா்கோவில் வடசேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற 28 போ் கைது செய்யப்பட்டனா்.
திமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி ஆசிரியா்களுக்கும், அரசு ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்களுக்கு ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் பதவி உயா்வைப் பறிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றிவரும் பகுதிநேர ஆசிரியா்கள், சிறப்பு ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சி.பி. செந்தில்குமாா், என். சுமஹாசன், ஏ. சுரேஷ்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில உயா்நிலைக்குழு உறுப்பினா் பி. தியாகராஜன், யூ. நாகராஜன், ஏ. பாக்கியமணி ஆகியோா் பேசினா். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 28 பேரை போலீஸாா் கைது செய்தனா்.