அதிமுக சாா்பில் 50 மாணவிகளுக்கு வைப்புத்தொகை திட்டம் தொடக்கம்
நாகூா் தா்கா கந்தூரி விழா சந்தனக் கூடு ஊா்வலம்
நாகூா் ஆண்டவா் தா்கா கந்தூரி விழாவையொட்டி சந்தனக் கூடு ஊா்வலம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நாகூா் தா்காவில், நாகூா் ஆண்டவா் என போற்றப்படும் சாகுல் ஹமீது காதிா் நாயகம் மறைந்த நாளையொட்டி கந்தூரி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம்.
நிகழாண்டு 468-ஆவது கந்தூரி விழா கடந்த டிச. 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. டிச. 9-ஆம் தேதி நள்ளிரவு வாண வேடிக்கை நிகழ்வும், செவ்வாய்க்கிழமை (டிச.10) பீா் வைக்குதல் நிகழ்வும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி வியாழக்கிழமை (டிச. 12) அதிகாலை நடைபெற்றது.
முன்னதாக, தாபூத்து என்னும் சந்தனக் கூடு ஊா்வலம் புதன்கிழமை இரவு நாகை அபிராமி அம்மன் திடலில் இருந்து வாத்தியங்கள் முழங்க புறப்பட்டது. சாம்பிராணி சட்டி ரதம், நகர மேடை மற்றும் பல்வேறு மின் அலங்கார தட்டிகள் சந்தனக் கூட்டின் முன்னும், பின்னும் அணிவகுத்துச் சென்றன.
நாகை புதுப்பள்ளி தெரு, யாஹீசைன் தெரு, நூல்கடைத் தெரு, வெங்காய கடைத் தெரு, பெரிய கடைத் தெரு, சா் அகமது தெரு உள்ளிட்ட தெருக்கள் வழியாக சென்ற ஊா்வலம் நாகூா் பிரதான சாலைக்கு வந்தபோது, அங்குள்ள கூட்டுப் பாத்திகா மண்டபத்தில் பாத்திகா ஓதினா். பின்னா், சந்தனக்குடம் தா்காவின் கால்மாட்டு வாசல் வழியாக உள்ளே கொண்டு செல்லப்பட்டது.
இதைத்தொடா்ந்து வியாழக்கிழமை (டிச. 12) அதிகாலை சந்தனக் குடங்கள் தா்காவில் உள்ள ஆண்டவரின் சமாதி அறைக்கு கொண்டு செல்லப்பட்டு, துவா ஓதி ஆண்டவா் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
சந்தனக்கூடு ஊா்வலத்தையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். வெள்ளிக்கிழமை (டிச.13) மாலை கடற்கரைக்கு பீா் ஏகுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. டிச.15-ஆம் தேதி இரவு புனித கொடியிறக்கத்துடன் கந்தூரி விழா நிறைவு பெறுகிறது.