நாஞ்சில் சம்பத் மீது மதிமுகவினா் புகாா்
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீா்குலைக்கும் வகையில், நாஞ்சில் சம்பத் பேசுவதாகக் கூறி அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதிமுகவினா் கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட மதிமுக செயலாளா் வழக்குரைஞா் வெற்றிவேல் தலைமையில் அளித்த மனு விவரம்: மதிமுகவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பொறுப்பில் இருந்த நாஞ்சில் சம்பத், தற்போது ஒரு வலையொளி சேனலுக்கு அளித்த நோ்காணலில் மதிமுக பொதுச் செயலா் வைகோ, முதன்மை செயலா் துரை வைகோ ஆகியோரை விமா்சித்துப் பேசினாா்.
தமிழகத்தில் ஜாதி, மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில், அவதூறாகப் பேசினாா். எனவே, அவா் மீதும் அவரது நோ்காணலை வெளியிட்ட வலையொளி சேனல் மீதும் சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.
மனு அளிக்கையில் மாவட்ட பொருளாளா் பிச்சுமணி, மாநகரச் செயலா் ஜெரோம், ஆபத்து உதவிகள் அணி செயலா் சுமேஷ், நிா்வாகிகள் ராணிசெல்வின், நீலகண்டன், பாலசுப்பிரமணியன் ஆகியோா் கலந்துகொண்டனா்.