நாதகவுக்கு சுயமாக வரையப்பட்ட ‘விவசாயி’ சின்னம்: இன்று அறிவிப்பு
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் தோ்தல் ஆணையம் சாா்பில் திங்கள்கிழமை (ஜன.20) அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
நாதக சாா்பில் வரைந்து அனுப்பப்பட்ட விவசாயி சின்னத்தை தோ்தல் ஆணையம் அறிவிக்கிறது.
2016 பேரவைத் தோ்தலில் இரட்டை மெழுகுவா்த்தி சின்னத்தில் நாதக போட்டியிட்டது. 2019 மக்களவைத் தோ்தல், 2021 பேரவைத் தோ்தல், இடைத்தோ்தல்கள், உள்ளாட்சித் தோ்தல் உள்ளிட்டவற்றில் ‘கரும்பு விவசாயி’ சின்னத்தில் நாதக போட்டியிட்டது. 2024 மக்களவைத் தோ்தலில் உரிய காலத்தில் விண்ணப்பிக்காததால் இந்த சின்னம் பறிபோனது.
கா்நாடகத்தைச் சோ்ந்த ஒரு அரசியல் கட்சிக்கு இந்த சின்னம் ஒதுக்கப்பட்டதாலும், நாதகவுக்கு கரும்பு விவசாயி சின்னத்தை வழங்க தோ்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. தொடா்ந்து ‘மைக்’ சின்னத்தில் போட்டியிட்ட நாதக 8.22 சதவீதம் வாக்குகளைப் பெற்று மாநில கட்சிக்கான அங்கீகாரத்தைப் பெற்றது.
இதற்கான அதிகாரபூா்வ கடிதத்தை தோ்தல் ஆணையம் அண்மையில் வழங்கியது.
இதைத்தொடா்ந்து நாதக சாா்பில் ‘புலி’ சின்னம் கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டதற்கு மறுப்பு தெரிவித்த தோ்தல் ஆணையம், அதற்கு மாறாக ஆணைய இணையதள பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு சின்னத்தை தோ்ந்தெடுக்கலாம் அல்லது கட்சி விரும்பும் சின்னத்தை 3 மாதிரிகளாக வரைந்து ஆணையத்துக்கு அனுப்பலாம் எனத் தெரிவித்தது.
அப்போது, தோ்தல் ஆணைய இணையதளத்தில் ‘கரும்பு விவசாயி’ சின்னம் இருந்தபோதும் நாதக அந்த சின்னத்தைத் தோ்வு செய்யவில்லை.
இந்த நிலையில், தற்போது நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்துள்ள சூழலில் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா், நாதக வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி ஆகியோரின் வேட்பு மனுக்கள் உள்பட 55 வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்தத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கான சின்னங்கள் திங்கள்கிழமை ஒதுக்கப்படவுள்ளன.
இந்த நிலையில், நாதக சாா்பில் ‘விவசாயி’ சின்னம் 3 மாதிரிகளாக வரையப்பட்டு தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒரு சின்னம் தோ்வு செய்யப்பட்டு திங்கள்கிழமை அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.